
நம்முடைய வாழ்க்கையில் சிலரைச் சந்தித்து இந்தக் காரியத்தைச் செய்யலாமா என்றால் நடக்காது, வேண்டாம் என்பார்கள்.
ஒரு காரியத்தைத் தொடங்கும்போதே வெற்றி பெறாது என்று சொல்லுவார்கள். ஆரம்பிக்கும்போதே அபசகுனம் பிடித்ததுபோல பேசாதே என்று சிலர் புத்திமதி கூறுவார்கள்.
மூடநம்பிக்கையால் இப்படிச் சொல்லுகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.
நம்பிக்கை இல்லாமல் தொடங்குகின்ற காரியங்கள் வெற்றி பெறுவதில்லை, எந்தக் காரியமும் வெற்றி பெறுவதற்குச் சாதகமான சூழ்நிலை அமைவதே அவசியமாகிறது. எண்ணங்கள் வலிமைமிக்கவை என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு வேலையைத் தொடங்கும்போது உங்களைச் சுற்றியுள்ள பத்துப்பேர் இந்த வேலை நடக்காது என்று சொல்வார்களேயானால், அவர்கள் உருவாக்குகின்ற எதிர்மறைச் சூழ்நிலை அந்த வேலையின் முன்னேற்றத்திற்குக் கண்ணுக்குப் புலனாகாதத் தடைகளை ஏற்படுகிறது.
எண்ணங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்கின்றன. நம்முடைய எண்ணங்கள் மட்டும் நம்முடைய செயல்களுக்குத் தடையாக இருப்பதாக எண்ண வேண்டாம். நம்மைச்சுற்றி உள்ளவர்களின் எண்ணங்களுக்கும் நம்முடைய செயல்களின் மீது பாதிப்பு இருக்கவே செய்கிறது. மங்களகரமான நிகழ்ச்சிகளின்போது பலரும் வந்து வாழ்த்துகிறார்கள். இந்த நடைமுறை எதனால் பின்பற்றப்பட்டு வருகிறது தெரியுமா?
பலரின் நல்வாழ்த்துக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. எனவேதான் வாழ்த்துச் சொல்கின்ற பழக்கம் பரம்பரை பரம்பரையாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
நல்லெண்ணங்களுக்கு நன்மையே செய்கின்ற சக்தி இருப்பது போலவே, தீய எண்ணங்களுக்குத் தடை ஏற்படுத்துகின்ற சக்தியும் உண்டு.
எனவேதான் ஒரு காரியத்தைத் தொடங்கும்போது அபசகுனப் பேச்சுக்கள் இருத்தல் ஆகாது எனச் சொல்லுகிறார்கள்.
உற்சாகமானவர்களையும், ஊக்கப்படுத்துகின்றவர் களையுமே தம் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் நல்லெண்ணம் நம்முடைய செயல்களை வேகப்படுத்தும்.
எதுவும் நடக்காது என்று சொல்லுகிறவர்கள் எதைச் செய்வதிலும் ஊக்கம் இல்லாதவர்களாக இருப்பதால் அவர்கள் மற்றவர்களின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட நபர்களைத் தவிர்ப்பதற்கு நீங்கள் பழகிக் கொள்ளவேண்டும்.
வாழ்க்கையில் தோல்விப் பகுதிகளைப் பார்த்துப் பழகிவிட்டவர்களுக்கு, வெற்றிப் பகுதிகளைப் பார்க்கின்ற ஆர்வம் இருப்பதில்லை.
தாங்கள் எப்போதுமே தோல்விக்குச் சொந்தக்காரர்களாக இருப்பதால், மற்றவர்களும் அவ்வாறு இருக்கும்போது அவர்கள் ஒருவகையான மனத்திருப்தி அடைகிறார்கள்.
எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் இவர்களில் ஒருவராக இருக்க வேண்டாம். இருட்டுக்கே பழகிவிட்ட ஆந்தைகளால் வெளிச்சத்தைப் பார்க்க முடியாது கண்கள் கூசும்.
நீங்கள் விடியலைத்தேடும் பறவைகளாக இருங்கள். வெளிச்சம் இருளை அகற்றும்.