
பொது அறிவுக்கும், தொழில் நுணுக்க அறிவுக்கும் வித்தியாசம் உண்டு. வியாபாரத்தில் நீண்டநாள் பழகியவர் அதில் தேர்ச்சி பெற்று விடுகிறார். எங்கே தரமான சரக்கைக் கொள்முதல் செய்வது, எந்த சீசனில் வாங்குவது, என்ன விலைக்கு விற்பது, எப்படி வாடிக்கையாளரை கவருவது எல்லாமே அவருக்கு அத்துப்படி. தொழில் நுணுக்க அறிவு பெற்றவர்களும் தங்கள் துறையில் மட்டுமே திறமையக்காட்ட முடியும்.
ஆனால் பொது அறிவு என்பது ஒரு பிரத்தியேக துறைக்கு உரித்தானது அல்ல. அது உலகின் எல்லா திசைகளிலும் கிளை விரிக்கிறது. வாழ்க்கையை எல்லா கோணங்களிலும் பார்க்கிறது. தொழில் நுணுக்க அறிவு மூளையை ஒரு குறிப்பிட்ட துறையில் ஈடுபடுத்தும் பொது அறிவு அப்படியல்ல. அது மூளைக்கு நல்ல உரமிடுகிறது. புத்திசாலியை அதிபுத்திசாலியாக்குகிறது. இங்கு ஒரு கேள்வி எழலாம். எல்லாம் அறிந்த ஒருவன் விவேகியாகிவிடுவானா? இல்லை.
அரசியல் தலைவரின் பிறந்தநாள், நடிகரின் விலாசம். எந்த பாட்டு எந்த படத்தில் என்று கண்டதை உபயோகமற்ற வகைகளை மூளையில் திணிப்பது கால விரயம். தன் அறிவை அபத்தமான வழிகளில் செலுத்துபவர் முன்னேற முடியாது. நிறையப் படித்தவர்கள்தான் மேல் நிலைக்கு வரமுடியும் என்பதில்லை.
யார் சிந்திக்கிறார்களோ, யார் கேள்விகள் கேட்கிறார்களோ, யார் துணிச்சலுடன் மேடை ஏறுகிறார்களோ அவர்தான் தலைவராக முடியும். மற்றவர்களெல்லாம் கை தட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். "அமெரிக்காவே, நீ வழி தவறிவிட்டாய்" என்று விரல் நீட்டி சுட்டிக்காட்டிய மார்ட்டின் லூதர் கிங் கறுப்பர் இனத்தலைவன் ஆனான்.
ஒரு தலைமுறையையே தன்பக்கம் திருப்பினார். புறக்கணிக்கப்பட்ட கறுப்பு இன மக்களுக்கு அமெரிக்காவில் சமஉரிமை பெற்றுத் தந்தார். அவர் தனது அறிவை தனது இனத்தவருக்கு பயன்படுத்த முன் வராவிடில் அத்தனை பிரபலம் ஆகியிருக்க முடியுமா? எந்த திரைமறைவும் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ்பவருக்குத்தான் மனவலிமை கிடைக்கும். புத்திசாலித்தனம் உள்ளவர் நாளைய பொழுதை இன்றே பார்க்கிறார். தன் தொலைநோக்கை பயன்படுத்தி தனக்காகவும் மற்றவருக்காகவும் கொள்கைகளை உருவாக்குகிறார். திட்டமிட்ட இலக்கை மிகச்சரியாகவே அடைகிறார்.
விவேகம் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்கிறது. உண்மையான வளர்ச்சி என்பது மனத்தளவில் கிடைக்கின்ற முன்னேற்றமும், தகுதிகளை அதிகரித்துக் கொள்வதும்தான். விவேகம் என்பது ஒரு நேர்மறையான குணவியல்பு. புத்திசாலித்தனத்தை அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது. அது சமுதாயத்திற்கு அனுகூலமாக இருக்கவேண்டும். ஒருவர் கையில் வைத்திருக்கும் மின்பொறிவிளக்கு அவருக்கு மட்டுமே உதவும் ஆனால் தெருவிளக்கு எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.
ஒளியை வழங்கும் நீங்கள் நிலவாகப் பாருங்கள். தெரு விளக்காக வேனும் திகழவேண்டும். எத்தனைக்கு உங்கள் மனம் உயர்கின்றதோ, விரிவடைகிறதோ அத்தனைக்கு நீங்கள் விவேகம் பெற்றவர்களாகிறீர்கள். இதனால் அடுத்தவர் பிரச்னைக்கு உங்களால் தீர்வுகாண முடியும்.