
வெற்றி நோக்கி பயணப்பட வேண்டும் என்றால் ஒரே நாளில் நிறைய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். என்ன சாப்பிடுவது, என்ன டிரஸ் போடுவது போன்ற சாதாரண விஷயங்களை யோசித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆனால் அதற்கு தகுந்தாற்போல் எளிமையாக செய்யும் வேலைக்குத் தகுந்தாற்போல் டிரஸ் போடுவது தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும் முடிவு எடுப்பதற்கு அது ஒரு உறுதுணையாக இருக்கும்.
ஆதலால் இறுக்கமான, மிகவும் தளர்வான, கசங்கிய ஆடை இல்லாதபடி போட்டுக் கொள்வது நல்லது. உணவும் பொறித்தது, வறுத்தது போன்றவற்றை தவிர்த்து எளிதில் உண்ணும்படி இருப்பதாக பார்த்து சாப்பிடலாம். இதனால் முக்கியமான விஷயங்களில் நன்றாக கவனம் செலுத்த முடியும். மேலும் முடிவு எடுக்கும் பொழுதும் கோபம் வராது. எல்லோருடனும் இணக்கமாக செயலாற்ற முடியும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் திறமையாக செயல்படுவதற்கு உதவும். சிலர் காலையில் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். சிலர் மதியத்தில் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். சிலர் மாலையில் இயங்குவார்கள். பலர் இரவு நேரங்களில் தனக்கு பிடித்த வேலையை சுலபமாக செய்து முடிப்பார்கள்.
ஆதலால் ஒரு நாளில் எந்த நேரத்தில் உங்கள் வேலைகளை வேகமாகவும், திறமையாகவும் செய்கிறீர்கள் என்று பாருங்கள். கிரியேட்டிவிட்டியும் புதிய சிந்தனையும் தேவைப்படுகிற அந்த நேரத்தில் செய்யுங்கள். இதனால் வெற்றிக்கொடி கட்டலாம்.
நிலத்தியல் பால் நீர்திரிந்தற்றாகும் என்கிறார் வள்ளுவர். அதுபோல் ஒருவருடன் பழகும் போது அவர்களின் பண்பும் நம்மை தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதால், விரத்தியுடன் புலம்பும் மனிதர்கள் உங்களிடமும் அவநம்பிக்கையை விதைப்பார்கள் .ஆதலால் அதைப் போன்றவர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது.
கவலையான மனிதர்கள் தங்கள் கவலைகளை அடிக்கடி கூறி அவர்களுடைய சோகத்தில் உங்களையும் ஆழ்த்துவார்கள். ஆதலால் அவர்களையும் அதிகம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மகிழ்ச்சியான மனிதர்கள் சூழ இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம். ஆதலால் இது போன்றவர்களுடன் பழகும்போது உங்கள் பழக்கங்களை கண்காணியுங்கள்.
எவை எல்லாம் உங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன என்பது புரியும். படிப்படியாக அதுபோன்ற மனிதர்களிடம் விட்டு விலகி நல்ல பழக்கங்களை மேற்கொண்டால் எந்த வேலை செய்தாலும் அது வெற்றியை நோக்கிய இலக்காக இருக்கும்.
நெருக்கடி பிரச்னை, விமர்சனம், குறை போன்றவற்றை எதிர்கொள்ளும்போது கொந்தளித்து குழப்பம் அடையாமல், அமைதியாக அதைப்பற்றி சிந்தித்தால் தெளிவான தீர்வுகள் பிறக்கும். எந்தச்செயலை செய்தாலும், யாருக்கும் உதவினாலும், யாருக்கு எதை போதித்தாலும், இதை எதற்காக நாம் செய்கிறோம் என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
அது உங்களுக்கு வளர்ச்சியோ, மதிப்போ கொடுக்க வேண்டும். உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் தரவேண்டும். அப்படிப்பட்டதாக பார்த்து செய்யும் பொழுது கவனச் சிதறல் ஏற்படாது. மனம் உறுதியாகி சரியான திசையில் செலுத்தி தடுமாறாமல் செய்ய உதவும்.