
உங்களுக்கும், உடலுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது இது மிக முக்கியமானது. எது நீங்கள் இல்லையோ அதை நான் என்று நினைத்துக் கொள்ளும்போது நாம் பைத்தியம்தான். உதாரணமாக ஒரு இரும்புக் கம்பத்தினை சிறிது நேரம் பிடித்திருந்து விட்டு, சிறிது நேரத்தில் நான்தான் இந்தக் கம்பம் என்று நினைத்தால் உங்களை பைத்தியம் என்றுதான் சொல்வார்கள். எப்போது இந்தப் பைத்தியக்காரத்தனம் ஏற்பட்டு விட்டதோ உங்களுடைய மனத்தையோ, உடலையோ, சக்தியையோ முழுமையாக உபயோகிக்க முடியாது.
நம்முடைய தேசத்தில் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. அத்தனை பேர்களும் தங்கள் திறமையை முழுமையாக உபயோகப்படுத்தினால் பிரமாதமான வகையில் முன்னேற முடியும். ஜனத்தொகையை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் விஷயமாகத்தான் பார்க்கிறோம்.
திறமையை உபயோகப்படுத்தாத, வளர்ச்சி காணாத ஜனத்தொகை தேசத்திற்கு சுமையாகும். முழுமையாக மலர்ந்த ஜனத்தொகையினர் நூறு கோடி பேர் இருந்தால் இந்த உலகமல்ல பிரஞ்சத்தையே நம் கைகளில் எடுத்துக்கொள்ள முடியும்.
ஆனால் எது நாம் இல்லையோ அதனுடன் அடையாளம் வந்து விட்டதால் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது. இப்பொழுது அடையாளம் உடலுக்கு மட்டுமல்ல கணவன், மனைவி, வீடு, சொத்து என்று அனைத்திலும் உங்களுக்கு அடையாளம் ஏற்பட்டுவிட்டது. உங்கள் அடையாளங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு மாரடைப்பே வந்துவிடும். எது நீங்கள் இல்லையோ அப்பொழுது உங்கள் திறமை, புத்திசாலித்தனம், செய்கின்ற செயல்கள் அனைத்துமே பிழைப்புக்குத் தான் உதவுமே தவிர அதைத்தாண்டி வேறு மகத்தான எதுவும் மலருவதற்கு வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
எப்போது உங்களுக்கு அனேக விஷயங்களில் அடையாளம் வந்து விட்டதோ, அப்பொழுது அறிவு வேலை செய்யாது. இங்கு மனிதனாக உருவெடுத்து வந்ததன் காரணம் சம்பாதித்து களித்து, இனப்பெருக்கம் செய்துவிட்டு பின் இறந்து போவது அல்ல. இந்த முழுமையான பிரபஞ்சத்தையும் மனிதனுக்கு உணரக்கூடிய சக்தி இருக்கிறது. இந்த உயிரை உயிராக மட்டும் கவனம் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் கணவன், மனைவி, அண்ணன், தம்பி என்கிற பல பாத்திரங்களாக ஏற்கலாம். ஆனால் அந்த அடையாளத்தில் நாம் அதுவாகவே ஆகிவிடக்கூடாது.
ஆனந்தம் என்பது ஒரு போதனை இல்லை. உயிரே ஆனந்தத்திற்காக ஏங்குகிறது. உயிரின் அடிப்படையே ஆனந்தம்தான். கடவுள் என்றால் அன்பு என்பார்கள். நம் கலாசாரத்தில்தான் கடவுள் என்றால் ஆனந்தம் என்று சொன்னார்கள். கடவுள் அடிப்படையே ஆனந்தம் என்று சொன்னார்கள். ஆனந்தம் அடைய உங்கள் அடையாளத்தைத் தொலைக்காதீர்கள்.