
"தள்ளாடாமல் பெரும் பாரம் தாங்குபவனே வலிமையுடையவன்' இது கார்லைல் கூற்று.
நம்மில் பலர் துன்பப்பட நேர்ந்தாலோ - சோகப்பட்டு புண்ணாகிப் போனாலோ - இழப்புகளை சந்தித்தாலோ தோல்வியைத் தழுவினாலோ அதற்குரிய காரணத்தை மிகச்சுலபமாக பிறரை கைநீட்டிக் காட்டுகின்ற மனோபாவத்தைக் கொண்டுள்ளனர்.
தேர்வில் தேறவில்லையென்றால் ஆசிரியரின் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்?
தனது குடும்பவாழ்வில் தனது செயல்களால் ஏற்படுகின்ற விபரீதங்களுக்கும் - விரயங்களுக்கும் மனைவி மேல் பழி போடுவதும் - எனக்கு வாய்த்த மனைவி நல்லவள் இல்லை எனச் சொல்லி மார் தட்டும் வீர புருஷர்கள் எத்தனை பேர்?
பொதுவாக மக்களில் பெரும்பாலோர் தனது சுமைகளை பிறரது தலையிலே ஏற்றி வைக்கவே துடியாய் துடிக்கின்றனர்.
தனது தவறுகளுக்கும் - நட்டத்திற்கும் மிகச் சுலபமாக பிறரைக் காரணம் காட்டி - தற்காலிகமாக மனநிறைவுஅடைகின்றவர்கள். அனைவரும் மன நோயாளிகள்; மனநோய் மருத்துவமனைக்கு உடன் அனுப்பப்பட வேண்டிய புறநோயாளிகள்.
மனநோய் மருத்துவமனையில் மனநோயாளி ஒருவன் தள்ளுவண்டியை தலைகீழாகத் தள்ளிக்கொண்டு வந்தான். எதிரே வந்த பார்வையாளர் பார்த்து அனுதாபத்தோடு, "ஐயோ பாவம்" என்று சொல்லி விட்டு ஏன் அப்படித் தள்ளுகிறாய்? என்றார். அவன் சொன்னான், "நான் நேற்று நேராகத்தான் தள்ளிக்கொண்டிருந்தேன்; ஆனால் அதில் குப்பையை போட்டு நிரப்பி விட்டார்கள். நான் ஒன்றும் பைத்தியம் இல்லை" என்றானாம்.
ஒன்று புரிகிறது. பலரும் நல்ல நோக்கத்துடன் கை வண்டியை தள்ளிக்கொண்டு போகின்றபோது அதில் மற்றவர்கள் குப்பைக் கூளங்களை நிரப்ப அனுமதித்து விடுவதால் - பலர் சுலபமாக தப்பித்துக் கொள்கின்றார்கள்.
பலரும் தங்களுடைய துன்பம் கஷ்டங்கள் ஆகியவற்றை சுலபமாக நம்முடைய சுமையாக்கி விடுகின்றார்கள்.
இதற்கு அடிப்படைக் காரணம் நம்மீது நமக்கு நம்பிக்கை இல்லாமையே. சுமைகளையும் துன்பங்களையும் கண்டு பயந்து ஓடுகின்ற கோழைத்தனம்தான். செய்த தவறுகளை உணர்ந்து - நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளுகின்ற பேராண்மை இல்லாமை.
உங்களது நடவடிக்கையால் தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளுக்கு உங்களை பொறுப்பாக்கிக் கொண்டு தீர்வை நாடிச்செல்லுங்கள்.
தவறு செய்துவிட்டோமே என்று சதா வருந்திக்கொண்டே இருப்பது -நமது மனதை புண்ணாக்கி புரையோடச் செய்துவிடும்.
தவற்றை ஏற்றுக்கொண்டு ஒத்துக்கொள்ளுங்கள். இதற்காக வெட்கப்படத் தேவையில்லை. திருந்தி வாழவும் -திருத்தப்பட்ட தீர்ப்புகளுக்கும் தவறு காரணமாகிறது. என்பதை உணருங்கள். தெரியாமல் செய்கின்ற தவறுக்கும் தெரிந்தே செய்கின்ற தவறுக்கும் கிடைக்கின்ற பலன்களை இரு கரம் நீட்டிப் பெற்றுக் கொள்ளுகின்ற மனப்பக்குவம் உங்களுக்குள் வந்தாக வேண்டும்.
விழாமல் இருப்பதை விட, விழுந்த பிறகு எழுந்து நிற்கின்ற ஆற்றல் நம்முள் ஒளிந்து கொண்டிருக்கின்றது. என்பதைப் பார்ப்பது நமக்குப் பெருமைதானே.
''எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும்; ஆனால் முட்டாளைத் தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான்" என்று ஸிஸரோ சொல்லியதைப்போல தவறுகளைத் தொடராதீர்கள். "To Err is Human" என்று சொல்லிக் கொண்டே தவறுகளைப் பூஜிக்காதீர்கள்.
தான் செய்த தவறுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருத்தம் தெரிவித்தவர்கள் பலர் உலகத்தால் இன்றைக்கு பாராட்டப் படுகின்றனர்.
மகாத்மாவின் "சத்திய சோதனை" என்ற புத்தகம் மோகன்லாலின் வெள்ளை மனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஆகவே சுமைதாங்கிக்காக அலையாதீர்கள்.