
சகிப்புத்தன்மை இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று. ஏனென்றால் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு வரும் அழுத்தங்கள் இதையெல்லாம் சமாளிப்பதற்கு ஒரே வழி சகிப்புத்தன்மை மட்டுமே. சகிப்புத்தன்மை மட்டும் இருந்துவிட்டால் போதும் நிச்சயமாக மனஅமைதி கிடைக்கும்.
தனிமனித வாழ்வில் துவங்கி, பொது வாழ்க்கை, குடும்பம், கொடுக்கல் வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்புதான் சகிப்புத்தன்மையாகும்.
சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் நம் நிலை தவறிவிடும். வாழ்க்கைப்போகும் வழியும் மாறிவிடும். எப்போது ஒருவர் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால், நாமும் அவரிடம் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் பழி வாங்கும் தன்மை. பழி வாங்கும் தன்மையை விட்டுவிட்டால் அதுதான் சகிப்புத்தன்மை.
அதேபோல மற்றவர்கள் எல்லா விதத்திலும் நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்காமல், அவர்களுக்குரிய முறையில் அவர்கள் இருப்பார்கள் என்று ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை. உலகில் நிலவும் பல்வேறு கலாசாரங்களையும் ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம்...!
மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத் தன்மை நம்மிடையே இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை என்பது சாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல, மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி.
புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச்செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது...!
வாழ்க்கையின் அடிப்படை உணர்ச்சிகளான அன்பு, நட்பு, ஈதல், சான்றாண்மை உள்ளிட்ட பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று சகிப்பு தன்மையுடன் வாழ முடிவெடுப்போம். எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறோமோ! அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கி விடுவோம். ஏனெனில், சகிப்புத் தன்மையே மானுடத்தின் மேன்மை...!!!
சகிப்புத்தன்மையயை வளர்த்துக் கொள்வோம். சகிப்புத் தன்மை அனைவரிடத்திலும் இருந்துவிட்டாலே போதும் உலகம் முழுவதும் அமைதிப் பூங்காவாகத் திகழும்...!