
அறிவுச் சாவியை எதிர்பக்கம் திருப்பினால் அது சந்தோஷத்தைப் பூட்டிவிடும்; சரியான பக்கம் திருப்பினால் சந்தோஷக் கதவுகள் திறந்துவிடும். ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் கற்றுக் கொடுப்பது அவர்களின் மதிப்பைக் கூட்டாது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்; எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கும் தெரியாமல் பயிற்சி அளிக்கவேண்டும்.
"ரொம்ப டல்லாயிருக்கிறே, நீ எல்லாம் எங்கப் படிக்கப் போறே, உன்னால் முடியாது" போன்ற எதிர்மறையான வார்த்தைகள் சிந்தையைப் பாதிப்பதோடு, மாணவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகும்.
சோர்வு தரும் இந்த எதிர்மறை வார்த்தைகளுக்குப் பதில் உற்சாகம் தரக்கூடிய நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். "உன்னால் சாதிக்க முடியும்! நீ சிறப்பாகச் செய்வாய்!" என்றெல்லாம் கூறும்போது இளைஞர்களுக்கு உற்சாகம் உண்டாகும்; அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
இது நல்ல பலனைத் தரும். ஆனால் தொடர்ந்து ஒரு மனிதனிடம் நேர்மறையான பாஸிடிவ் எண்ணங்கள் இருக்குமா? என்றால் அது நிச்சயம் ஒரு கேள்விக்குறிதான்.
வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்து சாம்பிராணி போட்டு வைத்துவிட்டு, வீட்டை சுற்றிச் சாக்கடைகளை ஓட விட்டுக் கொண்டிருந்தால், சாம்பிராணிப் புகை இருக்கும்வரை மணக்கலாம்; பிறகு துர்நாற்றம் வீசவே செய்யும்.
இதற்கு என்ன தீர்வு?
நேர்மறை எண்ணங்கள் நிலையாக நிற்காது திடீரென்று காணாமல் போய்விடும். பிறகு நம் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும்? சரியான சிந்தனை (Authentic Thinking) என்பது நம் சிந்தனைகளை நாமே சற்று தள்ளி நின்று, நடுநிலையோடு கவனிக்க வேண்டும்.
"வெற்றி என்பது பெற்றுக்கொள்ள; தோல்வி என்பது கற்றுக் கொள்ள" என்று உணர்ந்து தோல்வியால் துவளாமலும், வெற்றியால் பெருமிதமடையாமலும், சவால்களைச் சந்தித்துச் செயல்படுவோம்.
'அபாரம்' என்று மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்றால் 'பாரம் சுமக்க வேண்டும்'. தம்பி, நீ அபாரமாகச் செயல்பட வேண்டுமா?
முதலில் உன் எண்ணங்களைக் கவனி; ஏனெனில் அவை சொற்களாகின்றன. உன் சொற்களைக் கவனி; அவையே செயல்களாகின்றன. செயல்களைக் கவனி; அவையே பழக்கமாகின்றன. பழக்கங்களைக் கவனி; அவையே பண்புகளாகின்றன.
மனோசக்தி மாயாஜாலம்
உலகத்தில் உள்ள எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி - அதுதான் மனிதனின் மனோசக்தி. நம் உடலை வாள் வெட்ட முடியும். ஆனால் மனோதிடத்தை, அதில் விருட்சமாக வளரும் நம்பிக்கையை வெட்டும் வாள் இன்னும் உருவாகவில்லை.
மகிழ்ச்சியான வாழ்விற்குத் தேவை மனோசக்தி. இது இருந்தால் வாழ்வில் ஒழுங்குமுறை இருக்கும். ஒழுங்குமுறை இருந்தால் பொறுமை பிறக்கும். பொறுமை பிறந்தால் நம்முள் ஓர் அழகு ஒளிவிடும், அழகு ஒளிவிட்டால் அன்பு, தூய்மை, நேர்மை, மனிதநேயம், அறிவு ஆகியவை வெளிப்பட்டு வாழ்க்கை இன்பமயமாகும்.
"பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது; எதுவும் வரட்டும்; உலகம் இருந்தாலும் சரி, அழிந்தாலும் சரி, நான் என் கடமையை மறக்க மாட்டேன். இவை வீரனின் வார்த்தைகள்" என்பார் சுவாமி விவேகானந்தர்.
படகு பழுதானது என்றால் பதறக்கூடாது. 'கடலில் ஓர் இரவு' என்று கட்டுரைக்குக் குறிப்பெடுப்போம் என்று சவாலாய்க் கூறுவான் ஒரு கவிஞன். இளைஞனே, உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை.