
மனித வாழ்க்கையில் சிக்கல்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதற்கே சிலர் பிரம்மப் பிரயத்தனம் செய்வார்கள். அதே சமயத்தில் சிக்கல்களை சிறப்பாக எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். அது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
சிக்கல்களை சிறப்பாக சமாளிக்கும் வழிமுறைகள்;
1. சிக்கல்களை அடையாளம் காணுதல்;
பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் முக்கியம். அவற்றைப் பற்றி புலம்புவதை விட்டுவிட்டு தெளிவாக சிக்கலை மட்டும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். குடும்பம், உறவுகள், பணியிடம், சமூகச் சூழல் என எதில் வேண்டுமானால் சிக்கல்கள் இருக்கலாம். அவற்றை அடையாளம் கண்டுகொண்டு மனதார அங்கீகரிக்க வேண்டும். ‘இந்த வகையான பிரச்னை எனக்கு இருக்கிறது’ என்பதை முதலில் ஒருவர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
2. நேர்மறைக் கண்ணோட்டம்;
எந்த ஒரு சிக்கல் அல்லது பிரச்னையிலும் சிறிதளவு நன்மை இருக்கும். இந்த சிக்கல் அல்லது சவாலில் எந்தவிதம், என்ன விதமான நன்மை அல்லது ஆதாயம் இருக்கிறது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு வேலை போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு தற்போதைய வேலையில் மனதிருப்தி இல்லாமல் இருக்கலாம்.
புதிதாக ஒரு வேலையை தேடவேண்டும் என்பது சிரமமான காரியம்தான். ஆனால் அதே சமயத்தில் தற்போது உள்ளதை விட நல்ல வருமானம் வரும் சிறப்பான வேலையை ஒருவரால் தேடிக் கொள்ள முடியும். எனவே புதிய பணிக்கான ஆரம்பமாக பழைய வேலை இழப்பை எண்ணிக் கொள்ளலாம்.
3. நன்மைகளில் கவனம் செலுத்துதல்;
புதிய வேலை கிடைத்தால் புதிய சூழ்நிலை, புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் தற்போதுள்ள மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். புதிய வேலையில் உயர்வதற்கான வாய்ப்புகளும் வருமானம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களும் உருவாகும் என்று அந்த நன்மைகளை எண்ணி பார்க்க வேண்டும்.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது தான் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று அவர் நினைப்பார். எனவே ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு நடைப்பயிற்சி முதல் சரியான சமச்சீரான உணவு என்று நோயற்ற வாழ்வை நோக்கி அவரது பயணம் தொடங்கும். இது ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்பாடுகளுக்கு வழி வகுக்கும்.
4. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுதல்;
வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத விஷயம். மாற்றங்களை மனதார ஏற்றுக்கொள்ள பழகிவிட்டால் எதன் மீதும் புகாரோ அல்லது எதைப் பற்றியும் புலம்பலோ இருக்காது. மாற்றம் இல்லாமல் இருந்தால் ஒருவர் ஒரே இடத்தில் தேங்கிப் போக வாய்ப்பு உருவாகும். ஆனால் அதே சமயத்தில் மாற்றங்களினால் அவரது வாழ்வில் ஏற்றங்கள் வரலாம். சிக்கல்களும் பிரச்னைகளோ அவருக்கு சோர்வை தருவதற்கு பதிலாக உற்சாகத்தையே வரலாம்.
5. எளிமையான தீர்வுகளே போதும்;
எப்போதும் பிரச்னைகளை பெரிதாக நினைப்பதால் அதற்கான தீர்வுகளும் பெரிய அளவில் இருக்க வேண்டும், கடினமாக இருக்கவேண்டும் என்று மனித மனம் இணைக்கிறது. ஆனால் பல சமயங்களில் எளிமையான தீர்வுகளே பெரிய சிக்கல்களை கூட தீர்க்கும் வல்லமை பெற்றவை என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
உறவினர்களுக்கு இடையே மனஸ்தாபம் என்றால் அவர்களிடம் நேரிலோ அல்லது போனிலோ மனதார வருத்தம் தெரிவித்தால் மனக்கசப்பு அகன்று உறவுகள் கைகூடும். இந்த சிறிய தீர்வுகளை எண்ணிப் பார்க்க அஞ்சி பெரிய அளவில் பிரச்சினை வரும் என்று மனதுக்குள்ளயே நினைத்துக் கொண்டு பிரச்னையையும் சிக்கல்களையும் பெரிதாக்கக் கூடாது.