
எங்கு நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்குதான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது. அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுத் தர முடியாது. இதற்கு சில தோல்விகளும், வாழ்வில் சில சறுக்கல்களும் தேவை. நம்மை வேண்டாம் என்று தூக்கி எறியும் தருணங்களில் தான் நம்மால் நம் முழு திறமைகளையும் காட்டி சிறகை விரித்து பறக்க முடிகிறது. உழைப்பு உடலை வலிமையாக்கும். ஆனால் நாம் காயப்படும் தருணங்களில்தான் மனம் வலிமையாகி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
ஏற்பட்ட இழப்புகளை மறந்து வெற்றியை நோக்கி பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கினால் நினைத்ததை சாதித்து விடலாம். வழியில் ஏற்படும் தடைகளையும், தூக்கி எறியும் தருணங்களையும் தட்டிக் கழிப்பதை விட தகர்த்தெறிந்து விடுவது புத்திசாலித்தனம். வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி என்பதை மறக்க வேண்டாம்.
ஒருவர் நம்மை அவமதிக்கிறார் என்றால் அதிலிருந்து விலக முயற்சிக்க வேண்டும். அவர்கள் நம்மை தூக்கி எறியும் தருணங்களில், பதிலடியாக வார்த்தைகளை சிந்தாமல் நம்முடைய செயல்கள் மூலம் வெற்றி பெற்று காட்ட வேண்டும். அவர்களோடு மல்லுக்கு நிற்பது சேற்றில் கால் வைப்பது போல் நம் மேல்தான் வாரி இறைக்கும். கறை படியும். நம்மை அவமதித்து தூக்கி எறியும் தருணங்களில் முதலில் நாம் அவர்கள் மீதான மரியாதையை இழக்கிறோம். அத்துடன் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மை ஒருவர் தூக்கி எறியும் தருணங்களில்தான் நம்மால் சுதந்திரமாக நாம் எண்ணியபடி நம் இலக்கை நோக்கி நகர முடியும். அப்படி தூக்கி எறியும் நபர்களிடமிருந்து நாம் விலகி இருப்பதும் நல்லது.
சிலர் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறியும் பண்புள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நாம் எந்த ஆதங்கமும் அடைய வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக பிறருடைய உதாசீனங்களை எப்போது நாம் சந்திக்க வேண்டி உள்ளது என்பதை ஆராய்ந்தால் ஏதோ ஒரு நிலையில் நாம் வீழ்ச்சி அடைந்திருப்பது புரியும். அந்த வீழ்ச்சிக்கும் நாமேதான் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருப்போம். அதைக் கண்டறிந்து களைந்து விட்டு மேலே சென்று கொண்டிருக்க வேண்டும்.
குளத்தில் நீர் இல்லை என்றால் மீன்களுக்கு என்ன வேலை? மரத்தில் பழங்கள் இல்லை என்றால் பறவைகளுக்கு அங்கு என்ன வேலை? எனவே நம்மை வேண்டாம் என்று தூக்கி எறியும் தருணங்களில் சோர்ந்து விடாமல், ஏமாற்றம் அடையாமல், எதிர்பார்ப்பும் கொள்ளாமல் விலகி விடுவது நல்லது. இப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழப் பழகுவதுடன் அவர்களை புறக்கணித்து (ஜஸ்ட் இக்னோர்), கண்டுகொள்ளாமல் போய்விடுவது நம் பொன்னான நேரத்தையும் காக்க உதவும்.
தூக்கி எறியும் தருணங்களில் எந்த எதிர்வினையும் செய்து எதிராளிக்கு சந்தர்ப்பம் தராமல், விளக்கம் கூற முயற்சித்து மேலும் காயப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக அதை கடந்து முன்னேறிச் செல்வதே நல்லது.
சிறகை விரித்து பறக்க தயாராகுங்கள்!