
பொறாமை என்பது மனிதர்களின் இயல்பிலேயே உள்ள ஒரு குறைபாடு. அறிவு வளர வளர அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாமே தவிர, பொறாமையை உள்ளத்திலிருந்து நீக்கிவிடுவது என்பது இயலாத செயல். நீக்கவும் தேவையில்லையே. அடுத்தவர் மேல் பொறாமையைப் பிரயோகிக்காமல் இருந்தால் போதுமே!
பொதுவாக, பொறாமை கொண்டவர்க்கு யாரும் வெளியில் இருந்து கேடு செய்யத்தேவையில்லை. அவர்கள் பொறாமையே அவர்களுக்கு எதிரியாகி விடும். அவர்களைத் தீயவழியில் செலுத்தி, அவர்கள் செல்வத்தை அழித்துவிடும்.
அடுத்தவனிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்கிற ஆத்திரமே பொறாமை ஆகிறது. உண்மையில் தன்னிடம் உள்ளது எத்தனையோ, அவனிடம் இல்லை என்பதை இவர்கள் உணர்வதில்லை.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. கிடைக்க வேண்டும் என்பதும் இல்லை.
நாம் நாமாக இருப்போமே!
ஏன் இன்னொருவர்போல ஆகவேண்டும்?
அவனுக்கு மூக்கு அழகாக இருக்கிறது. எனக்கு இப்படி இல்லையே என்று நாம் வருந்துவதில்லை. அவன் உயரமாக இருக்கிறான். நான் அப்படி இல்லையே என்று கவலைப்படுவது இல்லை. ஆனால், அவன் வீடு கட்டிவிட்டான், கார் வாங்கி விட்டான். மகனுக்கு அமெரிக்காவில் வேலை வாங்கிவிட்டான் என்று பொருளாதாரம் சார்ந்த அந்தஸ்து போட்டியிலேயே அவனையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.
இந்த ஒப்பிட்டுப் பார்த்தலால்தான் பொறாமையே வருகிறது. நமக்குத் தெரியாத ஒருவர் காரில் போகிறார்; பங்களாவில் வாழ்கிறார்; ஊருக்குள் பெயர் புகழோடு இருக்கிறார் என்பதற்காக நாம் பொறாமைப்படுகிறோமா?
நமக்குத் தெரிந்த ஒருவர், நமக்குத் தெரிந்து சாதாரண நிலையில் இருந்தவர், இப்போது பெயர், புகழ், கார், பங்களா என்று வசதியோடு வாழ்வதைக் கண்டுதான் நமக்குப் பொறாமை உண்டாகிறது!
ஒப்பிட்டுப் பார்ப்பதால் வரும் வினை, இது.
நம்மைவிட வசதி வாய்ப்பில் பெரியவர்களா இருப்பவர்களுக்கும் மனக்குறை உண்டு.
உதாரணமாக, ஏழைக்கு ஏழு பிள்ளைகள்;
பணக்காரனுக்குப் பிள்ளைச் செல்வம் இல்லை.
நம்மைவிட வசதியானவனுக்கு, பிள்ளை இல்லை என ஏக்கம் அவனுக்கு; அவனிடம் இருக்கும் அதிகப் பணத்தை பார்த்து ஏக்கம் இவனுக்கு.
பிறரோடு ஒப்பு நோக்கி ஏங்குவதைவிட நம்மிடம் உள் ஆற்றலை வெளிக் கொணர்வதில் முனைப்பு காட்டவேண்டும். பிறர் மீது பொறமை கொள்வது எதிர்மறை மனோபாவம்.
நம்மீது நம்பிக்கை வைத்து நமது ஆற்றலை வெளிப்படுத்துவது உடன்பாடான மனோபாவம்.
பொறாமை நமக்கு நன்மை செய்வதை விட, பிறருக்குத் தீமை செய்து பின்னர் அவர் ஏவும் துன்பத்தையும் ஏற்க வேண்டிவரும் என்பதால் பொறாமைத்தீயை பொசுக்கி விடுங்கள் .