

பொதுவாகவே நமது வாழ்க்கையில் பலரிடம் பலவிதமாக பேசுவோம். சில தருணங்களில் நமது பேச்சில் நிதானம் கடைபிடித்து பேசுவோம். சில சமயங்களில் நம்மை அறியாமல் தேவையில்லாத வாா்த்தைகளை கொட்டிவிடுவோம்.
அதனால் பலவிதமான விளைவுகளை சந்திக்க நோிடலாம். ஆக, நமக்கு நமது நிதானமின்மையும் அதனால் வரும் கோபதாபங்களும் பலரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடக்கூடியசூழலும் உருவாகிவிடும். நாம் நமது வாழ்வில் பல தருணங்களில் சர்வ ஜாக்கிரதையாக பழகுவதோடு வாா்த்தைகளிலும் கண்ணியம் கடைபிடிப்பதே நல்லது.
தாய் தந்தை இல்லாதவர்களிடம் பேசும்போது நமது தாய் தந்தையைப்பற்றி பெருமைபடபேசக்கூடாது.
அதேபோல மருத்துவமனைக்குச் சென்றால் நோயாளிக்கு ஆறுதல் கூறுவதை விடுத்து நமது உடல்நலம் மற்றும் தேக ஆரோக்கியம் பற்றியும் இதுவரையில் எனக்கு உடல்நலக்கோளாறே வந்தது கிடையாது என பெருமைபட பேசக்கூடாது.
ஏழ்மையானவர்களைக் கண்டால் அவர்களிடம் எள்ளி நகையாடும் செயலில் இறங்கவே கூடாது. அதேபோல நமது வசதியான வாழ்க்கையைப்பற்றி பெருமைபட பேசவேகூடாது.
வாடகை வீட்டில் குடியிருக்கும் நபரிடம் நம்மிடம் இருக்கும் சொந்த வீடு தொடர்பாக பெருமையாக பேசக்கூடாது. ஒரு நண்பரின் மனைவி இறந்துவிட்டாலோ அல்லது விவாகரத்து வாங்கியிருந்து தனிமையில் அவர் வாழ்ந்துவரும் நிலையில் நமது வீட்டின் வாழ்க்கை முறைகளைப்பற்றி டாம்பீகமாக பேசக்கூடாது.
அதேபோல கடன் வாங்கி வீடு கட்டிய நபரிடம் வீட்டை அப்படி கட்டியிருக்கலாம் இப்படி கட்டியிருக்கலாம் என ஆலோசனை மற்றும் தேவையில்லாத கருத்துகளை சொல்லக்கூடாது.
இதனிடையில் ஆன்மிகம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் நமது ஆன்மிக கருத்துகளை தேவையில்லாமல் திணிக்கக்கூடாது.
அதேபோல ஒருவர் மகள் அல்லது மகன் திருமணத்திற்கு போய் மாப்பிள்ளை அழகில்லை, மணப்பெண் பொருத்தமாக இல்லை, எனஅனாவசியமான நாகரீகமில்லாத கருத்துகளை சொல்லவே கூடாது.
இப்படி பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் நோ்மறையில்லாத, எதிா்மறை கருத்துகளை நாம் சொல்லவே கூடாது.
எங்கு எப்போது எந்த இடம் என தொிந்து பேசவேண்டும். தேவையில்லாத கருத்துகளை நாம் சொல்லவே கூடாது. தான தர்மம் கடைபிடிப்பதுபோல நிதானமும் விவேகமும் கடைபிடித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லதாகும்.