
"ஒருநாள் கவலை என்பது ஒரு மாதம் முழுவதும் நாம் பெறுகின்ற மகிழ்ச்சியைவிட நீளமாக அமைந்து விடுகிறது" என்பது சீன பழமொழியாகும்.
"ஒருநாள் நாம் கவலைப்பட்டால் கூட அந்த கவலையானது நம் மனதை 'ஆசிட்' போல அரித்து, நீங்காத வடுவை ஏற்படுத்தி, காலமெல்லாம் நினைக்கச் செய்துவிடுகிறது" என்பது பலரின் வாழ்க்கையில் உண்மையாகிறது.
கவலைகள் வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இளமைப் பருவத்தில், பள்ளியில் படிக்கும் காலத்தில் "என்னால் நன்றாக படிக்க முயடிவில்லையே" என கவலைப்படும் இளைய உள்ளங்கள் உண்டு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் சின்னஞ்சிறு கவலைகள் மனதிலும் உருவாகத்தான் செய்யும். ஆசிரியர் ஒருவர் மாணவனை அழைத்து, வலது கையை நீட்டச் சொல்லி கையின் மீது கண்ணாடி குடுவையை வைத்து கொஞ்ச நேரம் அப்படியே நிற்கச் சொன்னார்.
மாணவனும் அவ்வாறே பிடித்துக்கொண்டு ஒரு நிமிடத்திற்கு நின்றிருந்தான். ஆசிரியர் அவனிடம் இந்த கண்ணாடி குடுவையை கையில் வைத்திருப்பது உனக்கு சுமையாக தோன்றுகிறதா? என்று கேட்டார்.
அதற்கு மாணவன் சுமையாக இல்லை என்றான். மீண்டும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு அதே கேள்வியை கேட்க, மாணவனும் சுமையாக இல்லை என்றே பதில் சொன்னான்.
15 நிமிடங்கள், 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் ஆயிற்று. மாணவனுக்கு கை வலிக்க ஆரம்பித்தது.
"சார் நான் இப்போது இந்த குடுவையை கீழே வைக்கலாமா? என்று கேட்டான்.
ஆசிரியர் அதற்கு, இன்னும் கொஞ்ச நேரம் குடுவையை வைத்துக்கொள் என்று பதிலளித்தார்.
சுமார் ஒருமணி நேரம் முடிவதற்குள் கை அதிகமாக வலித்ததால் மாணவன் கண்ணாடி குடுவையை கீழே போட்டு விட்டான்.
கண்ணாடி குடுவை உடைந்தது. உடைந்த கண்ணாடி குடுவையை அப்புறப்படுத்துவதிலேயே அந்த மாணவனின் கவனம் முழுவதும் சென்றது.
ஆசிரியர் மாணவர்களிடம், இந்த நிகழ்ச்சியை பார்த்த பின் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அதிக நேரம் கண்ணாடி குடுவையை கையில் வைத்திருந்தால் கை வலிக்கும். கண்ணாடி குடுவை உடைந்துவிடும் என்று கூறினார்கள்.
அப்போது ஆசிரியர், கண்ணாடி குடுவையை கையில் வைப்பது போலவே ஒரு கவலை தரும் நிகழ்வை நம் மனதில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் பிரச்னை இல்லை. நம் மனது தாங்கிக் கொள்ளும். ஆனால் சின்ன பிரச்னைகளை கூட தொடர்ந்து பல நாட்கள் மனதில் வைத்திருந்தால், நமது மனம் தாங்க முடியாமல் வலிக்க ஆரம்பிக்கும். கவலை கொண்ட மனதினால் நமது வாழ்க்கை பாதையை மாற்றி நமது வளர்ச்சியும் கெடுத்து விடும் என்றார் ஆசிரியர்.
ஆகவே, நல்ல நினைவுகள் வாழ்க்கையை சுவையாக்கும். கவலை தரும் நினைவுகள் வாழ்க்கையை சுமையாக்கிவிடும் என்பதால் கவலைகளை மறந்து எப்போதும் வெற்றி தரும் நல்ல சிந்தனைகளை மனதில் விதைப்போம்.