
படிக்கிற குழந்தை எந்தப் பள்ளியானாலும் படிக்கும் என்று பலர் சொல்வதுபோல் நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்கையில் முன்னேற குறிப்பிட்ட பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆங்கிலேயரே பார்த்து அசைந்த ஸில்வர் டங்கடு ஆரேட்டர்' என்று பெயர் பெற்ற ஆங்கிலத்தில் உரையாடுவதில் ஆங்கிலேயரையே அசரவைத்த ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி படித்தது எந்த பிரபல பள்ளியிலும் இல்லை ஒரு சாதாரண கிராமத்துத் திண்ணைப் கூடத்தில்தான்.
ஒரு துறையில் வெற்றி பெரும் ஒருவர் வேறு எந்தத் துறையிலும் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற கூற்று நிச்சயம் விமர்சனத்துக்குரியதுதான். காரணம் முட்டையிலிருந்து கோழியா என்பது போல்தான். இல்லை இந்தக்கூற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியாது. அதே சமயம் நிராகரிக்கவும் முடியாது.
காரணம் ஒரு துறையில் வெற்றி பெற்ற ஒருவர் மற்றத் துறைகள் எதுவாக இருந்தாலும் வெற்றி பெற்றிருப்பாரா என்ற கேள்விக்கு நம்மால் தீர்மானமாக ஆம்' என்றோ 'இல்லை' என்றோ சொல்ல முடியாது ந என்பதுதான் நிதர்சனமான உண்மை.
உதாரணத்திற்கு ஒரு வெற்றிகரமான பொறியியல் வல்லுனரை எடுத்துக்கொள்வோம். அவர் அந்தத் துறையில் அபார திறமை உள்ளவராக இருக்கலாம். அதற்காக அவர் ஒரு வெற்றிகரமான ஆசிரியராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ இருந்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு நாம் சிந்தித்துதான் பதில் சொல்ல வேண்டும்.
காரணம் நாம் குறிப்பிட்டுள்ள இரண்டு துறைகளுமே தனியாக கவனம் செலுத்தவேண்டிய துறைகள். ஆனால் சில நேரங்களில் நல்ல ஆசிரியர்கள் சிறந்த கதை எழுதபவர்களாக இருப்பதைப் பார்த்து இருக்கிறோம்.
ஒருவருக்கு பல திறமைகள் இருக்கலாம் ஆனால் ஒரே நேரத்தில் அனைத்து துறைகளிலும் வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பது பேராசை. அப்படி செய்தால் எந்த துறையில் வெற்றி கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு அதிகம்.
நம் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே துறையில் என்ன கஷ்டம் வந்தாலும் விடாமல் இருந்தால்தான் சாதிக்க முடியும் .இரண்டு துறைகளிலும் பிரமாதமான திறமை இருந்தாலும் ஏதாவது ஒன்றில் முழுமூச்சாக இறங்குவதுதான் புத்திசாலித்தனம். எனக்கு இதுவும் வருகிறது. எனக்கு அதுவும் வருகிறது என்று பல துறைகளில் வாயை வைத்தால் கடைசியில் எதிலும் இல்லாமல் நட்டாற்றில் நிற்க வேண்டியதுதான்.
உங்களுக்குப் பல திறமைகள் இருக்கலாம். ஆனால் அவை அனைத்திலும் நீங்கள் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை மட்டுமல்ல. யதார்த்தமாக சிந்தித்து பார்த்தால் இயலாததும் கூட. எனவே நன்கு யோசித்து சிந்தித்து உங்களுக்கு உகந்த தொழில் எது என்று தீர்மானியுங்கள். பின் குதிரைக்கு லாடம் கட்டியதுபோல் ஒரே பாதையில் பயணித்தால் வெற்றி கிடைக்கும்.