
ஒருவர் அறிவில் சிறந்து விளங்கலாம். நல்ல மனப்பாங்கு கொண்டவராக இருக்கலாம். சிறந்த திறன் படைத்தவராகத் திகழலாம். இருப்பினும், அவரது பழக்க வழக்கங்கள் சிறந்ததாக அமையாவிட்டால் அவரது வெற்றி கேள்விக்குறியதாகிவிடும். எனவேதான் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புபவர்களின் பழக்கவழக்கங்கள் (Habits) மிகச்சிறந்ததாக அமையவேண்டும் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பார்கள். இளம்வயதில் ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறந்ததாக அமைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களின் பழக்கவழக்கங்கள் சரியாக அமைகிறதா? என்பதை பெற்றோர்களும் மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
தவறு செய்யும்போது திருத்தவும், நல்லவை செய்யும்போது பாராட்டவும், பெற்றோர்கள் தயங்காமல் முன்வர வேண்டும். அப்போதுதான், இளைய உள்ளங்களின் பழக்கவழக்கங்கள் திசைமாறிச் செல்லாமல் நல்ல பாதையை நோக்கி நகரும்.
தேசியக்கவி பாரதியார் இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமைப்பெற்று விளங்கினார், பிறமொழி இலக்கியங்களைக்கூட தமிழில் மொழிபெயர்த்தார்.
இளம்பருவத்திலேயே கவிதை எழுதுவதை பழக்கமாக வைத்திருந்தார். இந்த நல்ல பழக்கவழக்கங்கள்தான் அவரை மிகச்சிறந்த கவிஞராக்கியது. 'மகாகவி' என்று அனைவரும் புகழும் வண்ணம் அவர் புகழ்கொடி நாட்டி வெற்றி பெற்றார்.
"படிக்காத மேதை" என்று புகழ்பெற்ற 'பெருந்தலைவர் காமராஜர்', இளம் வயதிலேயே "மற்றவர்களுக்கு சேவை செய்யவேண்டும்" என்பதை மனதில் நிறுத்தி சேவை புரிவதை பழக்கமாக வைத்திருந்தார். அதனால்தான், இன்றும் தேசியத்தலைவராக அனைவராலும் போற்றப்படுகிறார்.
தந்தை பெரியாரின் பழக்க வழக்கங்கள் - சாதிப் பாகுபாடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் எதிர்க்கும் விதமாகவே இளமையில் அமைந்தது. தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தப்பழக்கம்தான், அவரது பெருமைக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்தது.
இளம்வயதிலேயே அறிவை வளர்த்து, நல்ல மனப்பாங்கை உருவாக்கி, திறமையை மேம்படுத்தி, சிறந்த பழக்கவழக்கங்களோடு திகழ்பவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
அறிவு (Knowledge) என்பது ஒருவருக்கு தானாக வந்துவிடுவதில்லை. தெளிவான முயற்சியுடன்கூடிய, தெளிந்த பயிற்சியின்மூலம்தான் ஒருவரிடம் வநது சேரும்.
இந்த அறிவை வளர்த்துக்கொள்வதற்கு, இளம்வயதிலேயே சுற்றுப்புறச்சூழலை கூர்ந்து கவனித்து வருவது மிகவும் அவசியமாகும். தன்னைச்சுற்றி நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனிப்பவர்கள் மனதில், சில உண்மைகள் தெளிவாகத் தெரியும். தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டவர்கள், தனது அறிவைப் பெருக்கிக்கொள்கிறார்கள்,
அதுமட்டுமல்லாமல், தேவையான நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களும் போதிய அனுபவ அறிவைப் பெறுகிறார்கள். அனுபவ அறிவின் துணையோ பள்ளிகளில் சேர்ந்து பாடங்களைப் படிக்கும்போது, அறிவு மேலும் பெருகுகிறது. இந்த அறிவை, மேம்படுத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து முறையாக பாடங்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.
சிலர் பாடம் அல்லாத பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களையும், பெரியவர்களது வரலாறுகளையும் படித்து தங்களது அறிவினை அழகாக்கிக் கொள்கிறார்கள்.
கல்வி கற்பதனால் உருவாகும் அறிவும், புத்தகம் படிப்பதனால் உருவாகும் அறிவு இணைந்து ஒருவருக்கு கிடைக்கும்போது அவர் அறிவில் சிறந்தவராகத் திகழ்கிறார்.