
ஆர்வத்துக்குச் சமமான வலிமை சுயக்கட்டுப்பாடு. அது உங்கள் ஆர்வத்தை சரியான வழியில் செலுத்தும். ஆர்வம் எப்போதுமே விஷயங்களின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தும், அவற்றின் குறைகளைக் கவனிக்கத் தவறிவிடும்.
சுயகட்டுப்பாடு உங்கள் மனதின் மீதும், பழக்கங்களிலும், உணர்ச்சிகளிலும் ஆதிக்கம் செலுத்தி, அவற்றை ஒழுங்கு படுத்தும். நீங்கள் சுயக்கட்டுப்பாட்டில் தேர்ச்சி பெற்றால்தான் மற்றவர்கள் மத்தியில் ஒரு தலைவனாய் விளங்கமுடியும். இல்லையேல் எதிலும் பெரிய வெற்றியைக் காணமுடியாது."
''தன் மீது அதிகாரம் கொண்டவரால்தான் பிறர்மீதும் அதிகாரம் கொள்ளமுடியும்”
வெற்றிக்கான விதிகளில் சுயக்கட்டுப்பாடு (Self-discipline) மட்டும் விடாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டியது. அதை நீங்கள் முழுமையாய் கற்றுணர்வதற்கில்லை, தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியில் அது எளிதாகும்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக் கோரிக்கைகளைப் (Sales Calls) பெறுவது, வேலைக்குக் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது, கையிலெடுத்த திட்டத்தை முடிக்கும் வரை வேறெதிலும் கவனம் செலுத்தாதிருப்பது,தீய பழக்கங்களின் இடத்தில் நல்ல பழக்கங்களை வைப்பது என்று ஒரு கட்டாயத்தை உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்வீர்கள். அது சுய கட்டுப்பாட்டை வளர்க்கும்.
தொழிலிலும் சரி, வியாபாரத்திலும் சரி மிகவும் வெற்றி கரமாய் திகழ்பவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். எடுத்த வேலையை முடிப்பதற்குத் தேவையான கட்டுப்பாடு அவர்களிடம் இருந்ததைக் கண்டு கொள்வீர்கள், முக்கிய மற்றவைகளை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்கள் குறிக்கோள்களில் கவனத்தை ஒரு முகப்படுத்தியவர்கள் அவர்கள்.
“எட்டாத உயரத்தில் இருந்தாலும் வெற்றிக்கனியை அவர்கள் தட்டிப்பறிக்காமல் விட்டு விலகுவதில்லை"
ஜே. பீட்டர் க்ரேஸ் (க்ரேஸ் நிறுவனத்தலைவர்) தமது எழுபதாவது வயதில் அமெரிக்க அரசின் கமிட்டி ஒன்றிற்குத் தலைவராய் நியமிக்கப்பட்டார். நியமித்தவர் ரொனால்டு ரீகன். குடியரசின் பட்ஜெட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய வேலை அவருடையது. தமது நிறுவனப் பணிகளுக்குப் போலவே கமிட்டிக்காகவும் அவர் கணிசமாய் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது.
ஆனாலும் புதிய பொறுப்புக்கேற்ப ஒரு புதிய கால அட்டவணையை (schedule) அவர் தயாரித்துக் கொண்டார். விளையாட்டுக் கருவிகள் தயாரிப்பு, சில்லறை விற்பனை நிலையங்கள், ரெஸ்டாரன்ட்கள் என்று ஒன்றை விற்று இன்னொன்றை வாங்கித் தம்முடைய பணப்புழக்கத்தை அவர் அதிகரித்துக் கொண்டார்.
க்ரேஸ் தொய்வுற்றிருந்த தமது நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தினார். அன்னிய நிறுவனமொன்றுடன் கோகோ தயாரிப்பில் கூட்டு சேர்ந்து தம்முடைய நிலையை மேலும் ஸ்திரப்படுத்திக் கொண்டார்.
க்ரேஸ், தமது நிறுவனத்துக்குப் புத்துயிர் ஊட்டியபோது அவருடைய வயது எழுபத்தி நான்கு. அவருக்குள் இருந்த செயலூக்கம் ஆழம் காண முடியாதது, ஆற்றல் அளவிடற் கரியது.
வெற்றிக்கான விதிகளில் நீங்கள் எவற்றைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் தயங்காமல் அளித்த பதில் "முழுமையான அர்ப்பணிப்பு (dedication) உங்கள் காலத்தையும் உழைப்பையும் எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும்வரை வேறொன்றில் செலவிடக்கூடாது. வேலையையும் செய்து முடிந்தேயாக வேண்டும் என்கிற நிலையில் உங்கள் விருப்பங்களில் சிலவற்றை நீங்கள் விட்டுக் கொடுக்கும் படியிருக்கும்.
ஆகவே சுயகட்டுப்பாடு இருந்தால் சுதந்திரமாக வெற்றியை எட்டிவிடலாம்.