
சாதனையாளர் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் வெற்றியின் ரகசியம் என்னவென்று, சொல்வார்கள்.
தேவையான கல்வியும், அனுபவமும் என்னிடமிருந்தது. நான் கடினமாய் உழைத்தேன். தவறுகள் அதிகம் செய்ததில்லை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் இருப்பது முக்கியம்''.
இத்தகையவர்கள் தாங்கள் வேலைபார்க்கிற நிறுவனத்துக்கும், கட்சிக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இன்றியமையாதவர்களாகி விடுவார்கள். நிர்வாகமும், கட்சிக்காரர்களும், வாடிக்கையாளர்களும் அவர்களை விரும்புவதோடு, அவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள், அவர்களைச் சார்ந்திருப்பார்கள்.
தலைமைக்கான தகுதி இவர்களிடம் இருக்கும், காரணம் இவர்கள் சுயமாய் தொடங்கும் திறன் (Personal initiative) உடையவர்கள். எந்த வேலையையும் தங்களால் சரிவர செய்து முடிக்க இயலும் என்ற தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
வெற்றியாளர்களை மற்றவர்கள் விரும்புவதோடு, மதிக்கவும் செய்வார்கள். மற்றவர்களைவிட இவர்கள் தங்களை நன்றாகவே புரிந்து கொண்டிருப்பார்கள். அடுத்தவரை ஊக்குவிப்பதில் ஆர்வம் உடையவர்கள். எந்த வேலையையும் சுயகட்டுப்பாட்டுடன் முழுமையாய் செய்து முடிப்பார்கள்.
தனது நண்பருக்காகவோ, ஆலோசனை தேவைப்படும் உதவியாளருக்காகவோ, தன்னிடம் பிரச்னைக்குத் தீர்வு கேட்டு வருபவர்களுக்காகவோ நேரம் ஒதுக்க அவர்களால் முடிகிறது. இவர்கள், தகுதியான காரணம் இருக்கும்பட்சத்தில்எதையும் ஆழ்ந்து ஆராயத் தயங்குவதில்லை. தங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஒழுங்கில் வைத்திருப்பார்கள்.
வாரம் முழுவதும் மணிக்கணக்கில் வேலை பார்த்தாலும் சோர்வடைவதில்லை. அவர்களுடைய சொந்தப் பிரச்னைகளை உங்களால் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது. உடலளவிலும், மனத்தளவிலும் எப்போதுமே தகுதியாயிருப்பார்கள்.
சுயமாய் தொடங்கும் திறன்பற்றிக் குறிப்பிட்டோம், அது ஒரு அரிதான பண்பு. எதைச் செய்யவேண்டுமோ அதை அடுத்தவர் சொல்லாமல் தானாகவே செய்வது.
இது செயலைத் தொடங்கிவைக்கும் சக்திகொண்டது. தொடர்ந்து செயல்படவைப்பது.
இந்தச் சுயமாய் தொடங்கும் திறன் ஒரு உந்து சக்தியாயிருந்து உங்கள் குறிக்கோள்களையும், எண்ணங்களையும் உண்மை நிலைக்குக் கொண்டுவரும். இது எந்தத்துறையிலும் வெற்றி பெறுவதற்கு அவசியம். தொழில், விளையாட்டு, அரசியல், கேளிக்கை இப்படி எந்தத் துறையிலும், தேவையான கல்வி, தேவைப்படும் திறமைகள் உங்களிடம் இருக்கலாம்.
உலகிலேயே மிகச்சிறந்த யோசனைகள் (Ideas) உங்களிடம் இருக்கலாம். வெற்றியின் மற்ற விதிகளனைத்தையும் நீங்கள் நடைமுறைப்படுத்தலாம். ஆனால் ஒரு செயலைத் தொடங்கும் திறன் உங்களிடம் இல்லாவிடில் எதுவுமே நிகழப்போவதில்லை.
சரியான நேரத்தில் சரியாக செயல்படுகிறவர்களும், சுயமாய் தொடங்கும் திறன் (Personal inititative) உடையவர்களுத்தான் அத்தனை தொழில்களும் தோன்றக் காரணமாயிருந்திருக்கிறார்கள். அவர்கள் 'ரிஸ்க்' (Risk) எடுக்கத் தயங்குவதில்லை. காரியம் எத்தனை கடுமையானதாயினும் அதை விடாமல் செய்து முடிக்கும் உறுதியான நோக்கம் கொண்டவர்கள். இவர்கள் குறிக்கோளை குறைந்த நேரத்தில் எட்டிவிடுவார்கள்.