
எங்கும் எதிலும் நிதானம் தேவை. எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் நிதானமாக இருப்பது நல்லது. பொறுமை, கவனம், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது ஆகியவற்றை குறிப்பதுதான் இந்த நிதானம். எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும், முடிவெடுக்கும் பொழுதும் நிதானமாக இருந்தால் எடுத்த வேலையை சுலபமாக முடிக்க முடியும். செய்யும் வேலையில் தவறுகள் நேர்ந்து விடாமல் இருக்க நிதானம் அவசியம். நின்று நிதானித்து கவனத்துடன் செய்யப்படும் எந்த செயலிலும் தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும்.
தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். இன்றைய கால சூழலில் எதிலும் அவசரம் எங்கும் அவசரம் என்று அவசர மயமாகிவிட்டது.
சரியான முடிவுகள் எடுக்க வேண்டுமா? அதற்கும் நிதானம் அவசியம். அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு முடிவு எடுத்தால் அது தவறாக முடியலாம். சிக்கலை ஏற்படுத்தலாம்.
எனவே சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறந்த முடிவுகளை எடுக்க நின்று நிதானிப்பது மிகவும் அவசியம். எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும் பதட்டப்படாமல், நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஆற அமர யோசித்து செய்யும்போது தவறு நேராது. இதற்கு மனதை அமைதியாக இருக்க பயிற்சி மேற்கொள்வது நல்லது. தினமும் சிறிது நேரம் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்ய மனம் சஞ்சலப்படாமல் ஒருமுகப்பட்டு நிதானத்துடன் செயல்பட முடியும்.
நிதானமாக இருப்பது என்பது ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான சிறந்த வழியாகும். பின் விளைவுகளைப் பற்றி ஆலோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும், வார்த்தைகளை அள்ளி வீசுவதாலும் உறவுகளையும், நல்ல நட்புகளையும் கூட இழந்து விட நேரிடுகிறது. எதிலும் அவசரப்பட்டு இழப்புகளை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பொறுமை, அமைதி இரண்டையும் கடைபிடிக்க வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
என்றாவது ஒருநாள் பரபரப்புடன் செயல்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். எப்பொழுதுமே பரபரப்பு, அவசரம் என்றிருந்தால் அது உடல் நலத்திற்கு ஏற்றது அல்ல. 'பதறாத காரியம் சிதறாது' என்பார்கள்.
எதிலும் பதற்றமுடன் செயல்பட்டால் செய்கின்ற காரியத்தில் முழு வீச்சாக இறங்க முடியாமல், வெற்றி கிடைக்காமல் சிதறித்தான் போகும். எதிலும் நிதானம் இன்றி வேகமும் பரபரப்பும் இன்றைய வாழ்க்கையின் அடையாளங்களாகி வருகின்றன. அதனால் எதிலும் தேவையற்ற அவசரம் நீடிக்கிறது. அமைதியும் நிதானமும் காணாமல் போய்விடுகிறது.
இன்றைய சூழலில் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலானவர்கள் இருப்பதில்லை. காரணம் பல விஷயங்களை ஒன்றாக கவனித்து செய்ய வேண்டி இருப்பதால், சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் செய்து விடுவதால் தவறுகள் நேர வாய்ப்புகள் அதிகம். அதேபோல் அவசர அவசரமாக முடிவெடுக்கும்பொழுது செய்வது சரிதானா என்ற குழப்பம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அவசரத்தில் பல விஷயங்களை கவனிக்க மறந்து விடுவோம். காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது.