

துடுப்பு இல்லாத படகை போன்றது குறிக்கோள் இல்லாத வாழ்க்கை. நம்முடைய வாழ்நாளில் நாம் எந்த நிலையை எட்டிப் பிடிக்க வேண்டும்; எந்தெந்த காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை பற்றிய திட்டவட்டமான முடிவுகளை எடுக்க முதலில் குறிக்கோளை நாம் நம்முடைய மனதில் கொண்டிருக்க வேண்டும்.
நாம் எட்டிப் பிடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் இலக்குகள் எப்போதும் உயர்வானதாக இருக்க வேண்டும். எளிதில் அடைய முடியாததாக தொடு வானத்தைப்போல் இருக்க வேண்டும் என்கிறார் சாக்ரடீஸ்.
என்றேனும் ஒர நாள் இறந்து விடத்தான் போகிறோம். இது ஒன்று மட்டும் நிச்சயம். அந்த இறப்பு ஒரு உயர்ந்த குறிக்கோளாக இருக்கட்டுமே! என்கிறார் சுவாமி விவேகானந்தர். நாம் இந்த வினாடியிலிருந்தே நமது வாழ்க்கையின் குறிக்கோளை தேர்ந்தெடுத்து அதை அடைய முழுமூச்சோடு பாடுபடுவது அவசியம்.
திட்டமிட்டு செயலில் இறங்கும் தனி கலையை, நாம் பயின்று பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நமது திட்டத்தை குறிக்கோளுக்கு ஏற்றவாறு வகுத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை வளம்பெற ஒரு அவசியமான குறிக்கோளையும், மனோ சக்தியையும் உபயோகித்து அதனை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் கார்லைல்.
எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்ற உயர்ந்த தலைவர்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, அனைவருமே ஒரு திட்டவட்டமான குறிக்கோளை முன் வைத்தே உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்பது திடமாக தெரியவரும். நிலையான வெற்றி பெற்றவர்கள் என்று கருதப்படும் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவம் இந்த உண்மையைத்தான் நமக்கு எடுத்துரைக்கிறது.
ஒரு நிலையை அடையவும், ஒரு பொருளைப் பெறவும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் அது நிறைவு பெறுவதற்கு திடமான குறிக்கோள் அவசியம் வேண்டும். அப்படி ஒரு குறிக்கோளை உருவாக்கி நிலைபெற்றால்தான் முயற்சிகளை செய்து செயலில் வெற்றியைப் பெற முடியும்.
வெற்றி பெற விரும்புகிறவர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் ஒரு நிலையான குறிக்கோள் இருப்பதை காணலாம் .அந்த குறிக்கோளுக்கான திட்டமும் கைவசம் இருக்கும். தங்களுடைய சிந்தனைகளையும், செயலையும் எப்பொழுதுமே அந்த குறிக்கோளை அடைவதற்கான வழிகளிலேயே அவர்கள் செலுத்திக் கொண்டிருப்பதையும் காணலாம்.
தோல்வி அடைந்தவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு எத்தகைய லட்சியமும் இருப்பதில்லை. ஓரிடத்தில் நில்லாமல் உருண்டு கொண்டே இருக்கும் கல்லில் ஒருவிதமாசும் படியாது என்பது ஒரு ஆங்கில பழமொழி.
உலகத்தில் குறிக்கோள் இல்லாத பெரும்பாலானோர் தோல்வி அடைந்து தொல்லை பட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு எந்த விதமான குறிக்கோளும் இல்லாததால் எந்தவித சிந்தனையும் இல்லாமல் ஏதோ கிடைத்த வேலையை செய்து சொற்ப வருமானத்தை பெற்று உண்டு உறங்கி ஒரு பயனும் இல்லாமல் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஒருபோதும் நாம் இருக்கவே கூடாது. குறிக்கோளில் நாம் குறியாக இருந்து செயல்பட்டு வெற்றிக்கனியை சுவைப்போம்.