

வானத்தில் ராக்கெட் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை வாயு அழுத்தத்தினால் செலுத்தப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் இன்னொரு விசை வேலை செய்து செயற்கைக்கோளை வேண்டிய உயரத்திற்கு செலுத்துகிறது. பல கட்டங்களில் செயற்கைக்கோள் சென்றடைய வேண்டிய நிலையை படிப்படியாகத்தான் எட்டிப்பிடிக்கிறது.
இலக்கை சென்றடைய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் இதுபோல முயற்சிகள் மேற்கொண்டால் எளிதில் வெற்றி பெறலாம். மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு மலைத்துவிட வேண்டிய அவசியமில்லாமல் சிறிய சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு முதலில் அடையவேண்டும்.
ஒரு இலக்கை அடைந்தவுடன் பின்னர் அதையே தளம் ஆக்கி அடுத்த ஒரு இலக்கை உருவாக்கினால் சுலபத்தில் அடைந்து விடலாம். இலக்கே இல்லாத வாழ்க்கை செக்குமாடு வாழ்க்கையாக ஒரே வட்டத்தை மட்டுமே சுற்றி கொண்டிருக்கும்.
நம்முடைய முழு ஆற்றல் என்னவென்பது நமக்கு தெரியாமல் இருந்தாலும் எதை அடைய முடியும் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை இலக்காக்கிக் கொண்டு முயற்சிகளை தொடங்க வேண்டும். ஏனென்றால் இலக்கு இல்லாமல் வாழ்க்கை செயல்பாடுகள் அமைவதில்லை.
ஒரு பெரிய மரத்துண்டை மனதில் கருதினால் ,அந்த மரத்தண்டுக்கு எத்தனையோ வடிவங்கள் மறைந்து இருப்பதாக எண்ணலாம். அந்த வடிவங்கள் வெளிப்பட வேண்டுமானால் தச்சன் வேலை செய்வது அவசியமாகிறது. ஆனால் முதலில் மரத்திலிருந்து என்ன வடிவத்தை வடிக்க வேண்டும் என்று தீர்மானித்த பிறகே வேலை செய்ய தொடங்கவேண்டும். குதிரை வடிவமோ, யானை வடிவமோ எதுவானாலும் அதனை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
என்ன வடிவம் என முடிவே செய்யாமல் உளியை எடுப்பதில் பிரயோஜனம் இல்லை. மரத்துண்டு இருக்கிறது. உளி இருக்கிறது என்பதற்காக அதனை சிதைத்துகொண்டே போனால் எதுவுமே மிஞ்சாததோடு உழைப்பும் வீணாகிவிடும். இலக்கை நோக்கி குறி வைத்தால் அதிலிருந்து தவறவே கூடாது.
மகாபாரதத்தில் துரோணர் தன்னுடைய மாணாக்கர் களிடம் தொலைவில் உள்ள மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையின் வலது கண்ணை நோக்கி குறிவைத்து அம்பு எய்த வேண்டும் எனக் கூறினார். ஒவ்வொருவரும் இலை தெரிகிறது; கிளை தெரிகிறது என்று கூற அர்ஜுனன் மட்டும் பறவையின் வலது கண்ணைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என பதில் கூறினான்.
அர்ஜுனன்போல இலக்கை அடையவேண்டும் என்று விரும்புபவர்கள் அதில் மட்டும் கவனம் சிதறாமல் கவனத்தில் கொள்வது நல்லது.