
நாம் சிந்தித்துச் செயல்பட்டால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணலாம். அதோடு விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உன்னுடன் சேர்ந்தால், வெற்றி வீரனாக முடியும். நான் எதிலும் வெற்றி பெறுவேன் என நினைப்பதே தன்னம்பிக்கை. சுவாமி விவேகானந்தர். 'நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்' என்கிறார்.
ஒரு பிரச்னை வந்தால் மனம் ஒடிந்துவிடாமல், 'நான் பக்குவப்படுவதற்காக வந்துள்ள சோதனை இது' என்று நினை. பிறகு அந்தப் பிரச்னையை அணுகு. எந்த அணுகு முறையைக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்று யோசி. என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை இப்பதிவில் படியுங்கள்.
'இன்சூரன்ஸ் ஏஜெண்ட்' ஒருவர் பெரிய நிறுவனம் ஒன்றின் மானேஜிங் டைரக்டரின் அறைக்குள் பயந்தபடி கதவைத் தட்டி உள்ளே நுழைந்தார்.
நடுங்கியபடி அவரிடம் சென்று, "சார், நீங்கள் என்னிடம் ஓர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வீர்களா?" என்று கேட்டார்.
டைரக்டர் கோபமாக, "உன்னை யார் உள்ளே விட்டது? வெளியே போ" என்றார்.
"சாரி சார்' என்று அந்த ஏஜெண்ட் கூறி வெளியே வரத் திரும்பினார்.
ஏஜெண்ட் மீது பரிதாபப்பட்ட டைரக்டர், "ஒரு நிமிடம் இங்கு வா" என்று அவரை அழைத்து, "நீ ஓர் இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து கொண்டு இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் நடுங்கினால் எப்படி முன்னேறுவாய்?
"இப்படியெல்லாம் பயப்படக்கூடாது. என்னைப் பார். நான் எப்படி தைரியமாக இருக்கிறேன்! பிரச்னையைக் கண்டு பயப்படாதே... சரி, உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. உனக்கு நம்பிக்கை தருவதற்காகவே ஒரு பாலிசி எடுக்கிறேன். நீ உன் தொழிலில் வெற்றி காண்பதற்கு ஒவ்வொருவரிடமும் சரியான முறையில் அணுக வேண்டும். என்ன புரிந்ததா? என்றார் பெருமிதத்துடன்.
ஏஜெண்ட் அமைதியாகச் சிரித்தபடி, "பாலிசி எடுத்ததற்கு மிகவும் நன்றி சார். நான்தான் எங்கள் கம்பெனியின் 'டாப்' ஏஜெண்ட் பெரிய மானேஜிங் டைரக்டர்களைக் காணச் செல்லும்போது நான் கையாளும் அணுகுமுறை இதுதான். நான் இந்த முறையில் தோல்வி அடைந்ததே இல்லை" என்றார்.
இதைக் கேட்ட அந்த டைரக்டருக்கு எப்படி இருந்திருக்கும்!!
'இது இயலாத காரியம்' என்று நம் அறிவும், அனுபவமும் நம்மிடம் கூறினாலும், எதையும் நம் அறிவாற்றலால் செய்து முடிக்கும் திறமையை மரபு சாராத சிந்தனை (Lateral thinking) என்பர்.
இப்படி தர்க்க ரீதியான சிந்தனையிலிருந்து (Logical thinking) சற்றே வேறுபட்டு யோசிப்பவர்கள் புதிய, வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்வார்கள்; நாம் எதிர்பாராத ஒன்றைச் செய்வார்கள்.
எப்பொழுதுமே வெற்றிக்காக நாம் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தனை செய்து அந்த வெற்றியை நிச்சயம் அடையலாம். பல சமயங்களில் வித்தியாசமான சிந்தனைகள்தான் வெற்றியை சுலபமாக தேடித்தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.