

வாழ்க்கையில் முன்னேறவும், சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கவும் நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நேரத்தை வீணாக்காமல் உழைப்பவர்களால்தான் மிகப் பெரிய காரியங்களை செய்து முடிக்க முடியும். பெரும்பாலானவர்கள் தங்களுடைய நேரத்தை வீணாக்குவதால் எந்தவிதமான சந்தோஷத்தையும் காணாமல், அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டு அவலமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் சரிசமமாகக் கிடைக்கும் நேரம் எனற மூலப்பொருளை உபயோகப் படுத்திக்கொள்ளும் விதத்தைப் பொறுத்துத்தான் ஒருவனுடைய வாழ்க்கை அமைகிறது. நேரத்தின் மகிமையைப் கூறி ஆர்னால்ட் பெனெட் என்பவர் இவ்வாறு கூறுகிறார்.
உலகில் விரும்பும் அனைத்தையும் அடைவதற்கு உதவும் மிக அவசியமான மூலப்பொருள் 'நேரம்' என்பதுதான். காலையில் நீங்கள் எழுந்திருக்கும்போது உங்களுடைய சட்டைப் பையில் இருபத்தி நான்கு மணிநேரம் நிரப்பப்பட்டிருக்கும். அது அனைத்தும் உங்கள் ஒருவருக்குச் சொந்தம் அதை யாரும் உங்களிடமிருந்து திருடமுடியாது.
மற்ற எவருக்கும் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிடைப்பதில்லை. அறிஞன் என்பதற்காகவோ, பணக்காரன் என்பதற்காகவோ, உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தைவிட அவர்களுக்கு ஒருமணி நேரம் கூடுதலாகக் கிடைத்து விடுவதில்லை. மேலும், அனைவருக்கும் தினமும் இருபத்தி நான்கு மணிநேரம் நிச்சயம் கிடைக்கும். அந்த நேரம் உங்களுக்காகக் காத்து நிற்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிடாதீர்கள்'
ஒருவனால் எதையும் வாங்க முடியும். ஆனால் கடந்து போய்விட்ட காலத்தையும் நேரத்தையும் வாங்க முடியாது.
பெர்னார்ட் பெரென்ஸன் தொன்னூறு வயது நிறைந்த பழுத்த கிழவராக இருந்தபோது பின்வருமாறு கூறியிருக்கிறார்.
மனிதர்கள் அலைபாயும் தெருவில் நின்றுகொண்டு அங்கு நடந்து சென்று கொண்டிருக்கும் அனைவரிடமும் என் தொப்பியை நீட்டி கெஞ்சிக் கெஞ்சி பிச்சை கேட்பேன். ஆனால் நான் பணத்தையும் உணவையும் பிச்சையாகக் கேட்க மாட்டேன். அங்கு சென்று கொண்டிருக்கும் அனைவரிடமும், அவர்கள் உபயோகப்படுத்தாமல் வீணடித்துவிடும் நேரத்தில் சில நிமிடங்களை எனக்குப் பிச்சையாகத் தரும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்ளுவேன்.
வாழ்க்கை என்பதே நேரம்தான் என்பதை அவர் எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லிவிட்டார். 'அவன் மிகப் பெரிய அரசன் அவனிடம் நிறைய செல்வம் இருந்தது. அப்படியிருந்தும், இன்னும் அதிக நாள் உயிருடன் வாழ ஒரு வருட வாழ்க்கையை விலை கொடுத்து வாங்க முடியவில்லை என்று வேடிக்கையாகச் சொல்கிறார் வில்லியம் பென்.
நேரத்தின் அருமை பற்றி வில்ஹெல்ம் என்ற அறிஞர் கூறுகிறார். மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது விடிகாலையில் மூன்று நாட்கள் தொடர்ந்து எழுந்திருப்பவனுக்கு ஒருநாள் கூடுதலாகக் கிடைத்து விடுகிறது.
விடியற்காலையில் எழுந்து பறந்து செல்லும் பறவைக்குத்தான் நல்ல சுவையான கனிகள் கிடைக்கும். எனவே நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுவதே வெற்றி வாசலுக்குச் செல்லும் நுழைவாயிலாகும்.