
பலருக்கு வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அதாவது வாழ்க்கையில் பெரிய விஷயங்களை சாதித்த பிறகுதான் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பாக பலர் தன்னிச்சையாகவே தங்களின் இலக்குகளை அடைய வேண்டும் என நினைக்கிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்,
நாம் நமது புத்தகத்தை எழுதி பெரிய வெளியீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தவுடன்தான், மக்கள் நாம் சொல்வதை கவனிப்பார்கள்.
நான் ஒரு CEO ஆனால் மட்டுமே நிறுவனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை என்னால் எடுக்க முடியும்.
நான் கோடி ரூபாய் சம்பாதித்தவுடன் பிறருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வேன்.
இத்தகைய மனநிலையில்தான் பலர் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒரு உயர்ந்த இடத்திற்கு சென்றால் மட்டுமே நம்மால் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை செய்ய முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற சிந்தனைகள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே தருகிறது.
இவ்வாறு நினைத்துக்கொண்டு நீங்கள் உங்களின் ஒவ்வொரு இலக்கையும் அடையும்போது, அதற்கு அடுத்ததாக வேறொரு இலக்கு வந்துகொண்டே இருக்கும். இப்படி வாழ்க்கை முழுவதும் வேறு வேறு இலக்குத் துரத்தலில் இருந்துகொண்டே இருப்பீர்கள். எனவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ ஒரு உண்மையை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
"நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது. எனவே நீங்கள் செய்யும் செயல்களால் ஒரு வித்தியாசம் ஏற்படும்படி செய்யுங்கள்."
மகிழ்ச்சி என்பது நாம் பயனுள்ளபடி செய்யும் ஒரு செயலின் முடிவில் கிடைப்பதாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் பயனுள்ள பல விஷயங்களை செய்ய முடியும். உடற்பயிற்சி செய்வது, நல்ல உணவுகளை உட்கொள்வது, பிறரிடம் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவது, அனைவரிடமும் நல்ல முறையில் நடந்துகொள்வது என பல பயனுள்ள செயல்களை தினசரி நம்மால் செய்ய முடியும். இவை நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும்.
ஒருவேளை நீங்கள் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என விரும்பினால். சில சமயங்களில் அங்கே செல்வதற்கு சிறிது நேரம் ஆகலாம்.
ஆனால் அங்கே செல்வதற்கு தொடர் முயற்சி முக்கியமானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த புரிதல் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால், எதிலும் உறுதியாக இருந்து கண்டிப்பாக உங்கள் இலக்கை அடைய முடியும். வாழ்க்கையையும் அர்த்தமானதாக உணர முடியும்.