
நாம் விரும்புவதுபோல் மனிதர்கள் வேண்டுமென்றால் இந்த உலகில் யாருமே கிடைக்க மாட்டார்கள். எனவே நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் அவர்களின் நிறை குறைகளுடன் அப்படியே ஏற்றுக் கொள்ள பழகவேண்டும். அப்பொழுதுதான் அன்பு என்பது ஊற்றாக சுரக்கும். நமக்கு பிடித்தவரை அளவுக்கு அதிகமாக விரும்புவோம். காரணம் அன்பு செய்வது என்பது அவ்வளவு சுகம் தரும்.
தாய் தந்தை உடன்பிறப்புகள் உறவினர்கள் நண்பர்கள் என்று நம்மைச் சுற்றி இருப்பவர்களை மட்டுமல்ல, வளர்ப்பு பிராணிகள் மீது பாசம் வைப்பதும் ஒரு விதமான நேசம் கலந்த காதல்தான். காதல் என்பது அன்பு, பரிவு பாசத்தைக் குறிக்கும். காதலுக்கு வயதே கிடையாது. நாம் உயிர் வாழும் காலம்வரை அன்பு செலுத்தலாம்.
அன்பு இல்லையெனில் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது? அன்பு என்பது நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும். அன்பு செலுத்துவது என்பது பிறருக்கு நன்மையை விரும்புவதும், அவர்களுக்கு உதவ விரும்புவதுமாகும். அன்பு செய்தல் என்பதில் இரக்கம், பாசம், மனிதநேயம் போன்ற உணர்வுகள் அடங்கியுள்ளது.
அன்பு செய்வது சுகம் தரும். அது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியும் தந்து நல்ல உறவுகளைப் பேண உதவும். அன்பின் மூலம் எதிர்மறை உணர்வுகளான மன அழுத்தம், வருத்தம், சோகம் போன்ற உணர்வுகளைக் குறைக்க முடியும். பிரதிபலன் எதிர்பாராதது அன்பு மட்டுமே.
சபரி தான் ருசித்த பழங்களையே ராமபிரானுக்கு படைத்து மகிழ்ந்ததும், ராமன் அதனை ஏற்று நெகிழ்ந்ததும் அன்பின் ருசியால் தானே! காளத்தி வேடனாகிய திண்ணன், தான் சமைத்த பன்றிக் கறியை மென்று ஊட்டியதை ஏற்றுப் போற்றிய ஈசனின் அருள் வெளிப்படுவது அன்பின் ருசியன்றி வேறு ஏது?
அன்பு ஆர்வத்தை உண்டு பண்ணும். ஆர்வம் நட்பினை சேர்க்கும்; சுற்றம் சூழ இருக்க வைக்கும். அன்பும் அறமும் பண்புகளாய் மலரும். அன்புக்கு என்றும் அழிவில்லை. அன்பு தோற்பதும் இல்லை; வெல்வதும் இல்லை; உயிர் மூச்சு போல் உள்ளிருந்து கிரியா சக்தியாக இருக்கிறது. வாழ்தலின் அடிநாதம் அன்பு. அன்பு செய்வதும், அன்பைப் பெறுவதும் நம்மை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அன்பால் இந்த உலகத்தில் எதையும் சாதித்து விடமுடியும்.
அன்பு செய்வது மன மகிழ்ச்சியைத் தரும். மனதில் ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தும். ஆதலால் அன்பு செய்வீர்!