
கடலில் மீன் பிடிக்கச் செல்லுகின்றவர்கள் தரைக்காற்று கடலை நோக்கி வீசுகின்ற இரவு நேரத்தில் மீன் பிடிக்கச் செல்லுகிறார்கள். கடல் காற்று பூமியை நோக்கி வீசும் பகல் நேரத்தில் கடற்கரைக்குத் திரும்புகிறார்கள்.
காற்று வீசுகின்ற திசையில்தான் பாய்மரத்தைச் செலுத்த முடியும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். காற்று சாதகமாக வீசுகின்ற திசையைக் கணித்து இரவு நேரங்களில் இப்படிச் செய்கிறார்கள்.
எந்தக் காரியத்தையும் தக்க தருணம் அறிந்து செய்கின்ற போதுதான் வெற்றி சுலபமாகிறது. 'இரும்பு சூடேறிய நிலையில் அதை அடித்துச் சரிசெய்ய வேண்டும்' என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு.
நாம் விரும்புகின்றபோது காற்று வீசவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது அதனால் காற்று வீசுகின்ற போதுதான் நம்முடைய காரியத்தையும் சாதித்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் மனிதர்கள் முன்னேறுவதற்கு தேவையான ஒரு வாசகத்தையும் நம் முன்னோர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்- அதுதான் 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்கிற வாசகமாகும்.
சாதாரண களத்துமேட்டு அனுபவத்தை வைத்து சொல்லப்பட்டு உள்ள இந்த வாசகம், மிகப்பெரிய வாழ்க்கை உண்மையினை போதிக்கின்ற வாசகமாக அமைந்திருக்கிறது.
வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக்கொள் என்கிறது இந்த வாசகம். இதனைப் புரிந்துகொண்டு நாம் செயல்பட்டாலே வெற்றியின் வாசலைத் தொட்டு விடலாம்.
வாழ்க்கையில் அடுக்கடுக்காகாகச் சந்தர்ப்பங்கள் வந்து போகின்றன. வெற்றி பெறுபவன் அவற்றைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறான். சந்தர்ப்பங்களைத் தவறவிடுபவன் தோல்வி அடைவதோடு "அடுத்த வாய்ப்பு கிடைக்காதா?' என்று ஏங்கியும் தவிக்கிறான்.
இன்று உனக்கு, நாளை மற்றொருவருக்கு, மறுநாள் வேறொருவருக்கு என்று சந்தர்ப்பங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். நாம்தான் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும்.
நல்ல வாய்ப்புகளை நாம் உருவாக்கவேண்டும். தமது ஆற்றலை வெளிப்படுத்தும் கருவியாக கிடைக்கும் வாய்ப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாம் வெற்றி பெறுவதற்குத் திறமை வேண்டும். அதை வெளிப்படுத்தும் முறையை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சந்தர்ப்பம் நமக்குச் சாதகமாக வளைந்து கொடுக்கும்.
நெப்போலியனின் தளபதிகள் அவருக்கு, ஒருநாள் விருந்து கொடுத்தார்கள். இரவுமணி எட்டு பழரசக் கிண்ணம் தட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் சொல்லும் தருணம்.
திடீரென்று அதிரடியாக ஒரு குண்டுவெடிக்க வேண்டும். இது முன் ஏற்பாடு. இதை நெப்போலியனைத் தவிர அவருடைய மற்ற தளபதிகள் எல்லோரும் அறிவார்கள்.
முன் ஏற்பாட்டின்படியே குண்டு வெடித்தது. மற்றவர்கள் கைகளில் இருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் விழுந்து நொறுங்கின. ஆனால் நெப்போலியனின் கைக் கிண்ணம் மட்டும் சிறிதும் நடுங்கவில்லை, பழரசமும் ததும்பவில்லை. தளபதிகள் ஆச்சரியப்பட்டு, எப்படி உங்களால் இவ்வளவு முன் எச்சரிக்கையோடு இருக்கமுடிகிறது என்று கேட்டார்கள்.
நெப்போலியன் புன்சிரிப்பு தவழ, 'அதனால்தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன்: நீங்கள் தளபதிகளாக இருக்கிறீர்கள் என்றார். நெப்போலியன் விழிப்புடன் இருந்ததால் எதிலும் அவர் வெற்றி பெற்றார்.
நமக்குத் தேவை இந்த மாதிரியான விழிப்புணர்வும். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி முன்னேறத் தெரிந்த புத்திசாலித் தனமும்தான்.