
எடுத்த முடிவில் உறுதியாக இருக்கவேண்டும். அதற்கான முழு உழைப்பையும் கொடுப்பது, அதற்குரிய ஊக்கத்தை வளர்த்துக் கொள்வது, இவற்றிற்கெல்லாம் மேலாக செய்ய நினைத்ததை காலம் கடத்தாமல் உடனே செய்து முடிப்பது. இவை வெற்றி அடைவதற்கான சிறந்த வழிகளாகும். எடுத்த செயலை முடிக்க முடியாமல் தடைகள் பல வரலாம். தட்டிப் பறிக்க கூட்டமும் வரலாம். எதைக் கண்டும் அஞ்சாமல் துணிந்து முன்வைத்த காலை பின் வைக்காமல் எடுத்த செயலில் உறுதியாக இருக்க வேண்டும். யார் தடுத்தாலும் நின்று விடாமல் எடுத்த காரியத்தை நிறுத்தி விடாமல் முன்னோக்கி நகருதல் அவசியம். எடுத்த செயலை விட்டு விடாமல், முயற்சி என்ற விதையை நம் மனதில் ஆழமாக புதைத்து வைத்தோமானால் அது நம்பிக்கை என்ற வேரூன்றி மரமாகி வெற்றி என்னும் கனியை கொடுக்கும் சிறந்த செயலை முடிக்க உதவும்.
முடிவு எடுக்கும் முன் பலமுறை அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். அதன் சாதக பாதகங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முடிவால் ஒரு தவறும் நேராது என்ற தெளிவு பிறந்தால் திடமாக முடிவு எடுக்கலாம். இது நம் முடிவின் உறுதியை குலைக்காது. நாம் எடுக்கும் முடிவு சரியானதா தவறானதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? எடுத்த முடிவை தயங்காமல் செயல்படுத்தி பார்ப்பது தான் ஒரே வழி. பத்து போனாலும் சரி நூறு வந்தாலும் சரி என்ற சொல் வழக்கு ஒன்றுண்டு. அதாவது போனால் பத்து, வந்தால் நூறு அதுதான் துணிச்சல்! நாம் எடுக்கும் முடிவு நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்காமல இருக்குமாயின் அதனை தயங்காமல் எடுக்கலாம்.
எந்த சூழலில் அந்த முடிவு எடுக்கப்பட்டதோ அந்த சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனித்து வரவேண்டும். முடிவெடுக்க பயன்படுத்திய காரணிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லையென்றால் நாம் எடுத்த முடிவிலும் எந்த மாற்றமும் தேவையில்லை. எடுத்த முடிவில் உறுதியாக நிற்பது சவாலான விஷயம்தான். ஆனால் நாம் ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கான காரணங்கள், அதற்கான உந்துதல் எங்கிருந்து வந்தது என்பதிலும் தெளிவு இருந்தால் நம் உறுதிப்பாடு மேலும் வலுப்பெறும்.
நம் முடிவைப் பற்றி மற்றவர்களுடன் விவாதிக்கும்போது நம் நியாயத்தை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் வெளிப்படுத்த தயங்க கூடாது. நாம் எடுத்த முடிவில் மற்றவர்கள் தேவையின்றி தலையிடும் போது அதற்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும். நம் முடிவை மதித்து ஊக்கம் அளிக்கக்கூடிய நபர்களை நம்மைச் சுற்றி வைத்துக் கொள்வதும் நேர்மறையான விளைவுகளை உண்டாக்கும்.
நாம் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பது முக்கியம்தான் என்றாலும் நம் முடிவை செம்மைப்படுத்த உதவும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க தயாராக இருக்க வேண்டும். தீர யோசித்து முடிவெடுத்து விட்டால் பிறகு நம் பேச்சை நாமே கேட்கக்கூடாது! முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் முடிவுகளை எடுப்பது கடினம். ஆனால் மற்றவர்களின் கருத்துக்களால் அவை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உணர்ச்சி வசப்படும் சமயத்திலோ கோபம் கொள்ளும் நேரத்திலோ முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில் நாம் எடுக்கும் முடிவு தவறாகபோய் விட வாய்ப்புண்டு. அதேபோல் கவனச் சிதறல் இருக்கும் சமயங்களில் முடிவு எடுப்பதை தவிர்த்து விட வேண்டும்.
நம்மை நம்ப கற்றுக்கொள்வதுடன் நம் உள்ளுணர்வையும் நம்ப கற்றுக் கொள்வதும், நாம் எடுத்த முடிவில் நம்பிக்கை கொண்டு செயலாற்றுவதும் மிகவும் முக்கியம்.
தன்னம்பிக்கையுடன் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வாழ்த்துக்கள்!