
கடந்த காலத்தை நினைத்து நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல் இருக்க பழகவேண்டும். நிகழ்காலத்தில் நடப்பதை மட்டும் நினையுங்கள். கவலைகள் பறந்து போகும். கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் கவலைதான் மிஞ்சும். அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு சிறிதும் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்வோம். நடந்து முடிந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்றெண்ணி சோக நினைவுகளையும், மனதிற்கு வருத்தத்தை தருபவைகளையும் எண்ணி வீணாக கவலைப்படுவதை விடுத்து நிகழ்கால மகிழ்ச்சியை தேடிப்போகவேண்டும். நடந்து முடிந்த விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது.
கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் நிறைய வாழ்வதால் நிகழ்காலத்தில் வாழ மறந்துவிடுகிறோம். நடப்பது எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தும் சில விஷயங்களை வேற மாதிரி நடந்தால் நன்றாய் இருக்குமே என்று யோசிப்பதிலேயே நேரத்தை கழிக்கிறோம். ஆரோக்கியமான மனதிற்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் கடந்த காலத்தை எண்ணி வருந்துவதை நிறுத்திவிட்டு நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று இருக்கப் பழக வேண்டும்.
நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும்பொழுது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் ஏற்படும். வாழ்க்கையில் எப்பொழுதும் கற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டாம். ஏனென்றால் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது. புதிய புதிய விஷயங்களைத் தேடி கற்றுக் கொள்வது மூலம் நம்மை சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும். துன்ப நினைவுகளை அசைபோட நேரமே இருக்காது. நடப்பதை மட்டுமே நினைத்தால் பாதி கவலைகள் உண்டாகாது.
சிலரால் மட்டும் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது தெரியுமா? மகிழ்ச்சியாக இருக்க பணமோ, பதவியோ, வசதியோ தேவையில்லை. இவை அனைத்தும் கிடைத்துவிட்டால் கூட நம்மால் சந்தோஷமாக எந்த கவலையும் இன்றி இருந்து விட முடியாது. சந்தோஷம் என்பது நம் எண்ணத்தில்தான் உள்ளது.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் கவனித்து ரசிக்கவும், கொண்டாடவும் கற்றுக்கொண்டால் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவிருக்காது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற எண்ணம் ஏற்படும்.
நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்கள்தான் நம் மனநிலையை முடிவு செய்கின்றன. எனவே நம்மைச் சுற்றிலும் மகிழ்ச்சியான நண்பர்களையும், ஊக்கம் அளிக்கும் உறவினர்களையும் கொண்டு அவர்களுடன் நேரத்தை செலவிட நமக்குள் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
நிகழ்காலத்தில் வாழ கற்றுக்கொள்வோமா நண்பர்களே!