

நம்மைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை என்று இருக்கும்போது நாம் ஏன் மற்றவர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை சிலரிடம் உள்ளது. ஆனால் நாம் மற்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நம்முடைய பிழைத்தலுக்காகதான் என்பதை உணரவேண்டும். அதேபோன்ற தேவை எதிர்தரப்பிற்கும் இருந்தால்தான் நம்மை புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். இல்லை என்றால் அது நம் நேரத்தை விரயமாக்கும் விஷயமாக இருக்கும். எல்லோரும் எல்லாரிடமும் எப்பொழுதும் உறவாடப் போவதில்லை எனும் பொழுது எல்லோரும் எல்லாரையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது என்பது தேவையற்ற செயல்; அபத்தமானது என்று எண்ணுபவர்கள் அதிகம்.
மற்றவர்களைப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளாததும் எப்படி நம் விருப்பமோ அதுபோல்தான் மற்றவர்களின் விருப்பமும் என்பதை உணரவேண்டும். யாரையும் முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நமக்கு பிடித்தவர்களை முழுமையாக ரசிக்க பழகலாம். அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ளலாம். நமக்காக மாறவேண்டும் என்று யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். அதிக எதிர்பார்ப்புகளின்றி வாழத்தொடங்கினாலே நிம்மதி ஏற்படும்.
யாராயிருந்தாலும் கொஞ்சம் தள்ளி நின்றால் உறவும் நட்பும் ஆயுள் பரியந்தம் தொடரும். அவசரத்தேவைக்கு சமயத்தில் உதவுவதும், நட்பு ரீதியில் தேவைப்படும்போது உதவிக்கரம் நீட்டுவதும் என்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக அவர்களும் அதேபோல் நம் தேவைகளின்போது உதவுவார்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நாம் பிறரைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவியாக இருப்பது என்பது நம் மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதாக இருந்தால் போதும் அதற்கான பிரதிபலனை எதிர்பார்க்காமல் இருப்பதுதான் நல்லது.
மற்றவர்களை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது அல்லது புரிந்து கொள்ளும் பொழுது நம்மிடம் இருக்கும் பிளஸ் மைனஸ் எண்ணங்களையும், நம் கருத்துக்களையும் நாம் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும். இதன் மூலம் பிறரின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டு வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். மற்றவர்களின் உணர்ச்சி நிலையை கணிப்பதன் மூலமும், அவர்களின் செயல்களின் பின்னணியில் உள்ள காரணத்தை புரிந்து கொள்வதன் மூலமும் தேவையற்ற மோதல்களை தவிர்க்கவும் முடியும்.
மற்றவர்களின் பார்வைகளைப் புரிந்துகொள்வது, நம்முடைய சொந்த உணர்ச்சி நுண்ணறிவை (emotional intelligence) வளர்க்க உதவுகிறது. இது நாம் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதை மேம்படுத்துகிறது. சமூக அடையாளங்களை அங்கீகரிப்பதும், மற்றவர்களின் அனுபவங்களைப் புரிந்து கொள்வதும் சமூக நல்லிணக்கத்திற்கு மிகவும் அவசியம். எனவே மற்றவர்களைப் புரிந்துகொள்வதற்கு சிறந்த வழி பிறரின் கண்ணோட்டத்தையும் சூழ்நிலையையும் புரிந்து கொள்வதே.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!