
பறவையின் சிறகுகள் கனமாக இருந்திருந்தால் அவை பறக்க முடியுமா? எதுவுமே சுமை என்று நினைத்தால் சுமைதான் சுகமென்று கருதினால் சுகம்தான்.
சிலர் எடுத்ததற்கெல்லாம் கவலைப்படுவார்கள், பெருமூச்சு விடுவார்கள். ஒன்றும் இல்லாததைப் பெரிதுபடுத்தி, தூக்கத்தைத் தொலைத்து ஏக்கத்தில் மெலிவார்கள்.
வேறு சிலரோ பற்றி எரியும் பிரச்னைகளின்போது பதறாமல், சிதறாமல் காரியம் பார்ப்பார்கள். நகைச்சுவையாய் பேசி தன் துயரத்தையும் மறப்பார்கள். அடுத்தவரையும் சிரிக்க வைத்து இருக்கிற சூழ்நிலையை இலேசாக்கி விடுவார்கள்.
நாம் இன்னும் அதிகமாய் சிரித்துப் பழகவேண்டும் துன்பங்களின் கடுமையைக் குறைவாய் உணர வேண்டும். வியாபாரத்தில் வரும் நெருக்கடி. குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், எதையும் நகைச்சுவை இலேசாக்கிவிடும். அதைப்போல வார்த்தைகளைக் கையாளுவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.
உங்களை ஒருவர் பாராட்டிப் பேசினால் உங்களுக்குத் தரையில் கால்படுமா? உடம்பெங்கும் ஒரு புத்துணர்ச்சி பரவ எத்தனை உற்சாகமாகி விடுகிறீர்கள்?
'ஒரு பாராட்டான வார்த்தை போதும், இரண்டு மாதங்களுக்கு என்னை தெம்பாக வைத்திருக்க!' - இப்படிச் சொன்னவர் மார்க்ட்வைன்.
தோட்டத்தில் கொத்தி செடிவைத்து, நீர்பாய்ச்சி வண்ண வண்ணமாய் பூக்கள் மலரும்போது, நம்ம முதலாளி ஒரு வார்த்தை பாராட்ட மாட்டாரா? என்று காத்திருக்கும் தோட்டக்காரர்-
மணிக்கணக்கில் பாடுபட்டு சமைத்து வைத்து அதற்கான பாராட்டுப் பத்திரத்தை உங்கள் கண்களில் தேடிக்கொண்டிருக்கும் மனைவி-
நாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிறோம். அப்பா,நம் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டுவாரா என மதிப்பெண் தாளைக் கையில் வைத்திருக்கும் பிள்ளை.
இப்படி உங்கள் பின்னால் நிறைய பேர் ஒரு சின்ன பாராட்டு கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு நல்ல வார்த்தைக்காக ஏங்குகிற மனங்கள் எங்குமே உண்டு.
நம்பிக்கையும், கனவும் நிறைவேற ஊக்கம் தேவை.நம்மை யாராவது தட்டிக் கொடுக்க மாட்டார்களா என்றுதான் எல்லோருமே முற்றும் பார்க்கிறார்கள்.
வார்த்தை வலிமையானது. அது மிகப்பெரிய மக்கள் சக்தி உங்கள் பக்கம் திருப்பிவிடும்.
உலக யுத்தத்தில் பிரிட்டன் தோற்றுக் கொண்டிருந்த நேரம் பதவிக்கு வந்த சர்ச்சில் பேசினார். 'நாம் கடலில் சண்டைபோட வேண்டி இருக்கும். வானில் நேருக்கு நேர் மோதும்படி இருக்கும். நிலத்தில் உக்கிரமாய் போரிடும்படி ஆகும். நாம் தோற்பதில்லை. எந்தவிலை கொடுத்தும் நாட்டைக் காப்போம். நாம் சரணடையப் போவதில்லை சக்திமிக்க இந்த சர்ச்சிலின் வார்த்தைகள் சரித்திரத்தையே மாற்றி எழுத வைத்தன.
பாராட்டு வேறு; புகழ்ச்சி வேறு. போலியான வார்த்தைகள் நாவளவில் தித்திக்கும்; சீரணிக்கப்படுவதில்லை. அலங்கார வார்த்தைகள் காதளவுக்குத்தான் இனிமை; நெஞ்சைத் தொடாது.
உங்களுடைய நடத்தை, போக்கு, மனச்சார்பு மற்றும் நடை உங்களது வாழ்க்கையை வடிவமைக்கும்.
ஒழுங்கு பண்பாடான நடத்தை, நல்ல பழக்கம், மகிழ்ச்சியான மனநிலை, பேசும் விதம் என்பதெல்லாம் ஒரே நாளில் கற்றுக்கொண்டு விடுகிற விஷயமல்ல. அதற்கு முயற்சி தேவை; இடையறாத பயிற்சி தேவை.
முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் இரு கண்கள். இதனைக் கவனமுடன் கையாண்டால், மகிழ்ச்சித் தென்றல் வாழ்க்கைப் பூங்காவில் வீசி நம்மை மகிழ்விக்கும்.