Motivatonal articles in tamil!
Lifestyle stories...

வீழ்வது தவறல்ல… வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு!

Published on

வாழ்க்கையில் விழுவதும் எழுவதும் தவிர்க்க முடியாத விஷயங்களாகும். எந்த ஒரு செயலிலும் வெற்றி உடனே கிடைத்து விடாது. பல சந்தர்ப்பங்களில் தோல்வியால் மனமுடைந்து இனி நம்மால் வெற்றி பெறவே முடியாது என்று மனம் தளர்ந்து தோற்றுப் போனவர்கள் ஏராளம். ஒரு குழந்தையைப் பாருங்கள். எழுந்து நிற்க முயற்சி செய்யும். கீழே விழும். அழும். உடனே மீண்டும் எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஒரு கட்டத்தில் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுவிடும். ஒரு குழந்தைக்கு இருக்கும் இந்த போராட்ட குணம் நம்மில் பலருக்கு இல்லாமல் போவது ஏன் ? யோசியுங்கள்.

ஒரு செயலில் தோற்றுப் போய் விழுகிறீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் மற்றும் உறவினர்களின் கேலிப்பார்வைக்கு ஆளாக நேரிடும். கவலையே படாதீர்கள். உறுதியான மனநிலையோடு எழுந்து நில்லுங்கள்.

ஒரு சிலரே எத்தனை முறை தோல்விகளைச் சந்தித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இத்தகையவர்கள் நிச்சயம் வெற்றியையும் பெறுகிறார்கள். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும்.

பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனை பயன்படுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதை அவர் பல நூறு முறை முயற்சிகளுக்குப் பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வாறு பலப்பல தோல்விகளுக்குப் பின்னரே டங்ஸ்டன் இழையினை பல்பிற்குள் வைத்து சோதித்து வெற்றி கண்டார்.

அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார்.

“தொடர்ந்து தோல்வியையே சந்தித்தீர்களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா ?”

“நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் தோல்வியின் மூலம் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்.”

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கையே தனிப் பெரும் வெற்றி!
Motivatonal articles in tamil!

ஒவ்வொருவரும் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாமல் விடாது முயற்சி செய்த காரணத்தினாலேயே சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியை சந்திக்கிறார்கள்.

முதல் முறை தோற்பதற்கும் இரண்டாவது முறை தோற்பதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கும். முதல் முறை தோற்கும்போது ஏன் தோற்றோம் என்று புரியாது. ஆனால் இரண்டாவது முறை தோற்கும்போது ஏன் தோற்றோம் என்ற காரணம் புரியும். மூன்றாவது முறை முயற்சி செய்யுங்கள். ஏன் வெற்றி கிடைக்கும்வரை கூட முயற்சி செய்யுங்கள். எப்படி வெற்றி கிடைக்காமல் போகும். உன்னை ஒரு கை பார்க்கிறேன் என்று துணிச்சலோடு செயல்படுங்கள். வெற்றி உங்களைத் தேடி ஓடிவரும்.

logo
Kalki Online
kalkionline.com