மனிதர்களின் வாழ்வில் முயற்சி என்பது மிகவும் முக்கியமான அங்கம் வகிக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் முயற்சி தேவைப்படுகிறது. அதை ஒருபோதும் எதற்காகவும் விட்டு விடக் கூடாது.
முயற்சி என்கிற ஆயுதம்;
முயற்சியை கைவிடக்கூடாது என்கிற எண்ணமே தனிப்பட்ட வாழ்வு, தொழில்முறை மற்றும் சமூகச் சூழல்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக செயல்பட வைக்கும். ஒருவர் தான் எடுக்கும் முயற்சியில் தோல்விகள், சவால்கள், சங்கடங்கள், போராட்டங்கள் என எதை வேண்டுமானாலும் அனுபவிக்க நேரலாம். ஆனால் எதன் பொருட்டும் முயற்சியை மட்டும் ஒருவர் கைவிடவே கூடாது. ஏனென்றால் முயற்சி மட்டுமே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான காரணி ஆகும்.
சவால்கள் மூலம் வளர்ச்சி;
சவால்கள் மற்றும் தோல்விகள் பெரும்பாலும் சிறந்த ஆசிரியர்களாக திகழ்கின்றன. சிரமங்கள், சவால்களை எதிர்கொள்ள நேரும்போது விடாப்பிடியாக இருந்து முயற்சியை தொடர வேண்டும். அது மதிப்புமிக்க பாடங்களை கற்றுத்தருகிறது. மிகவும் வலிமையாக வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. இது நீண்ட கால வெற்றிக்கு அவசியமான ஒரு பண்பாகும். இவற்றுடன் பொறுமை உறுதிப்பாடு மற்றும் உள் வலிமை போன்ற பண்புகளையும் அது வளர்க்கிறது.
இலக்குகளை அடைதல்;
சாதனைகள் ஒரே நாளில் யாருக்கும் நிகழ்வது இல்லை. அது காலப்போக்கில் ஒருவர் எடுத்த நீடித்த முயற்சியின் விளைவுகளாகும். பலமுறை முயன்று எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று அந்த முயற்சியை கைவிடும் போது இலக்கை யாராலும் அடைய முடியாது. தொடர்ந்து இலக்கை நோக்கி செயல்படுவது அவசியம்.
முன்னேற்றம்;
முன்னேற்றம் என்பதும் ஒரே இரவில் நிகழ்ந்து விடாது. அது பெரும்பாலும் படிப்படியாகத்தான் ஒருவருக்கு வாய்க்கும். அதற்கான படிகளில் ஒருவர் மெல்ல மெல்ல தான் ஏற முடியும். முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செயல் படுவதன் மூலம் தான் ஒவ்வொரு படியாக ஏறி கடைசியில் இலக்கு என்ற உச்சியை அடைய முடியும்.
பயத்தை வெல்வது;
முயற்சியில் தோல்விகள் கிட்டும்போது பயம் உண்டாகலாம். ஆனால் விடாமுயற்சி பயத்தை உடைக்க உதவுகிறது. ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொண்டு பயத்தை வென்று முயற்சி தொடர வேண்டும்.
நோக்கத்தில் தெளிவு;
இலக்குகளை இறுகப்பற்றிக் கொண்டு விட்டுக் கொடுக்காமல் மேலும் முயற்சி செய்து கொண்டே இருந்தால் அந்த நோக்கத்தின் தெளிவு பூர்த்தியாகும். கடினமான காலங்களிலும் தெளிவான நோக்கம் வழிகாட்டும்.
எதிர்பாராத வாய்ப்புகள்;
ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். காலப்போக்கில் எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும். முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும். முயற்சியை இடையில் கைவிட்டு இருந்தால் வாய்ப்புகள் வருவது சாத்தியம் இல்லை.
முயற்சியில் பெருமை;
முடிவை பற்றி கவலைப்படாமல் சிறந்த முயற்சியை ஒருவர் கொடுக்கும்போது விளைவு அற்புதமாகத் தான் இருக்கும். மேலும் தான் எடுத்த முயற்சியை கை விடவில்லை என்கிற பெருமையும் திருப்தியும் ஒருவருக்கு கிடைக்கும். அது அவருடைய சுயமரியாதை மற்றும் தனிப்பட்ட ஒருமைப்பாட்டை அவருக்குள் விதைக்கிறது.
விடாமுயற்சி;
விடாமுயற்சி நீடித்த தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்துகிறது. முயற்சியை விட்டுக் கொடுக்காமல் இருப்பதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஒருவர் பங்களிக்க முடியும். உலகின் மிகப்பெரிய கண்டு பிடிப்புகள் மற்றும் சமூக மாற்றங்கள், பல துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை விடாமல் கெட்டியாக இறுகப் பிடித்த தனி நபர்களிடமிருந்துதான் வந்தன. எனவே முயற்சி என்ற ஒன்றை ஒருபோதும் தன் ஒருவர் தன் வாழ்வில் கைவிடவே கூடாது.