நம்மீது பழி சொல்லும் எவருமே நமக்கு வழி சொல்லப் போவதில்லை.
இப்படிப்பட்டவர்களை விட்டு அமைதியாக விலகுவதே சிறந்தது. தோற்றாலும் கலங்காமல் வெற்றியை நோக்கி செல்வதே நம் லட்சியமாக இருக்க வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கை நம் கையில்தான்.
விட்டுக் கொடுத்துப் போங்கள் என்று கூறுபவர்கள் எதுவரை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுவதில்லையே. எதையும் பொறுத்துக் கொள்ளும்போது நல்லவர்களாக தெரியும் நாம் எதிர் கேள்வி கேட்டால் கெட்டவர்களாக ஆகிவிடுவோம். நம்மை செயல்பட விடாமல் செய்பவர்களை விட்டு ஒதுங்கி இருப்பதே நல்லது. நம் வளர்ச்சிக்கு தடைக் கற்களாக இருக்கும் யாரையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் நம் வாழ்க்கை நம் கையில்.
யோசித்துப் பாருங்கள். நம் வாழ்வின் பெரும்பான்மையான பகுதியை நாம் பிறருக்காகவே வாழ்ந்து செலவழிக்கிறோம். நமக்காக வாழ மறந்து விடுகிறோம்.நாம் செய்ய விரும்புவதைக் கூட செய்ய நேரம் இன்றி தவிர்த்து விடுகிறோம். நம் சொந்தங்களுக்காகவும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காகவும் மட்டுமே வாழ பழகியுள்ளோம். இதனால் சில காலம் கழித்து நமக்கு வாழ்க்கை மீது உள்ள சுவாரஸ்யம் போய் சலிப்பு வந்து விடுகிறது.
சலிப்பின்றி வாழ்வை சுவாரசியமாக்க நாம் மெனக்கிட வேண்டும். ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்லும் பொழுது இன்று நான் விரும்பிய இந்த செயலை செய்து முடித்தேன் என்று எண்ணுவதே உண்மையான மகிழ்ச்சியாகும். ஏனெனில் நம் வாழ்க்கை நம் கையில். அதை திறம்பட நிர்வகிப்பதில் நமக்கு முக்கிய பங்குண்டு.
வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் என்கின்ற விலை மதிப்பில்லாத நேரத்தை கொடையாக அளிக்கிறது. இந்த அற்புதமான நேரத்தை நாம் பணத்திற்காக மட்டும் ஓடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நம் மனத் தேவைகளுக்காகவும் செலவழிக்க தெரிந்து கொள்ள வேண்டும்.
வாழும் வாழ்க்கையை சுவாரசியமாக்க தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நமக்கு பிடித்தமான செயல்களிலும், மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய, நம் விருப்பங்களை பூர்த்தி செய்யக்கூடிய, வாழ்க்கையையே அழகாக்கக் கூடிய செயல்களையும் செய்யவேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கை நம் கையில்.
காய்கறிகள் வாங்கும் பொழுது கூட அதைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கும் நாம் வாழ்க்கையை அழகூட்டப் போகும் அரிய வாய்ப்புகளையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம். ஏனெனில் நம் வாழ்க்கை நம் கையில்.
நாம் வாழும் வாழ்க்கையை சலிப்பின்றி இனிமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற தினம் தினம் முயற்சிக்க வேண்டும். நாம் செல்லும் பாதையை சரியாக தீர்மானித்து, நம் விருப்பங்களை நிறைவேற்றும் பணியை ஏற்று, நம் இலக்கை நோக்கி நடப்பதே வாழ்வின் லட்சியமாக கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்டவர்களைத்தான் சாதனையாளர்களாகவும், வாழ்க்கையை நன்கு படித்தவர்களாகவும் உலகத்தாரால் போற்றப்படுகின்றனர். புகழப்படுகின்றனர்.
நமக்கு என்ன தேவை என்பதை சரியாக புரிந்து கொண்டு திட்டமிட்டு செயல்படுவதே வாழ்வை சலிப்பின்றி சுவாரஸ்யமாக கொண்டு செல்லும். வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த மிகவும் விலைமதிப்பில்லாத பரிசு. அதனை ஒவ்வொரு நிலையிலும் ரசிக்கப் பழகினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சந்தோஷம் நிறைந்த முழுமையான வாழ்க்கை வாழ வாழ்த்துகள்!