மழலையர் கல்வியின் அடித்தளமும் பெற்றோரின் பங்களிப்பும்!

ஆசிரியரின் வழிகாட்டுதலும், பெற்றோரின் கூட்டு முயற்சியும் இணையும் போதுதான், குழந்தைகளின் ஆளுமைத் திறன் சிறந்து அவர்களின் எதிர்காலக் கல்விக்கான அடித்தளம் மிக வலுவாக அமையும்.
Nursery Education and Parents Responsibilities
Nursery Education and Parents ResponsibilitiesAI Image
Updated on

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிக்குச் செல்ல மாணவ, மாணவிகள் தயாராகிக் கொண்டு இருக்கும் போது, பட்டாம்பூச்சிகளைப் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நர்சரி பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களும் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள்.

தங்கள் விருப்பம் போல, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், முதன்முதலாக பலதரப்பட்ட மனிதர்களையும், வித்தியாசமான , சில கட்டுப்பாட்டோடு கூடிய சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ள சில நாட்கள் ஆகும்.

ஒவ்வொரு குழந்தைகளும் ஒரு தனித்தன்மையோடு இருப்பார்கள். சிலர் உடனே நட்போடு பழகுவதையும், சிலர் அமைதியாக, அதேசமயம் கவனமாக இருப்பதையும் பார்க்கலாம். நர்சரி வகுப்பு என்பது, பல தோட்டத்தில் இருந்து வந்த, வண்ணமயமான மலர் தோட்டம் என்றால் மிகையாகாது.

நம் குழந்தை நர்சரியில் தானே படிக்கின்றார்கள் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. "பசுமரத்தாணி போல" எதையும் விரைவில் பார்த்து, கற்றுக்கொள்ளும் வயது அவர்களுக்கு.

பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடத்தை செய்யும் போது, நீங்களும் அருகிலிருந்து உதவ வேண்டும். அலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றின் தாக்கம் இல்லாமல் முழுகவனத்தோடு ஈடுபடும் போது குழந்தைகளுக்கும் அதில் ஆர்வம் உண்டாகும். மனதிலும் நன்கு பதியும். கற்கும் திறனும் அதிகரிக்கும்.

அதேபோல, பள்ளியில் ஆசிரியர் பாடத்தை கற்றுக்கொடுக்கும் முன்பாகவே , ஒரு சிலர் வீட்டிலேயே சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். ஆசிரியர் அதை வகுப்பில் சொல்லித்தரும் போது, அந்தக் குழந்தைக்கு வகுப்பில் ஆர்வமில்லாமல் இருப்பதோடு, கவனச்சிதறலும் ஏற்படும். ஆசிரியரிடம் தாங்கள் கற்றுக் கொண்டதை, அவர்களே விளையாட்டாக உங்களுக்குக் கற்றுதரும் போது உற்சாகத்தோடு, ஊக்கப்படுத்துங்கள்.

இன்றைய காலகட்டத்தில், பள்ளிக்கு விடுமுறை எடுப்பது, சில காரணங்களால் வீட்டுப்பாடம் எழுதாதது போன்றவற்றை வாட்ஸ் ஆப் (Whatsapp), இமெயில் மூலம் வகுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கின்றனர். அப்படி தெரியப்படுத்தியதை குழந்தைகளிடமும் கூறுங்கள். அப்போது தான், இதற்காக ஆசிரியரிடம் நாம் அனுமதி பெற வேண்டும் என்ற நல்லபழக்கத்தையும் கற்றுக்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
‘குழந்தையை சரியாக கவனிக்க முடியவில்லை’ என்ற குற்ற உணர்வு கொண்ட பெற்றோரா நீங்கள்?
Nursery Education and Parents Responsibilities

பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் அவர்களை கட்டாயம் சேர்த்துவிடுங்கள். சக குழந்தைகளோடு அவர்களும் போட்டிகளில் சேரும்போது உற்சாகம் அடைவார்கள். வெற்றி, தோல்வியை பற்றி ஏதும் அறியாத வயது அது.

சில நேரங்களில் வீட்டில் அழகாக சொல்லும் குழந்தை, கூட்டத்தை பார்த்ததும் பேச மறந்துவிடும். அதைப்பற்றி பெற்றோர்களும் வருந்தக்கூடாது. முதன்முதலில், மேடையில் ஏறி கூட்டத்தைப் பார்ப்பதே அவர்களுக்கு ஒரு சாதனை. அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும். இதுபோன்ற சின்னச்சின்ன செயல்கள் தான் அவர்களின் ஆளுமைத் திறனை(Personality Development) அதிகரிக்க உதவும்.

பெற்றோர்கள் இரண்டு பேரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் இருந்தாலும், அவ்வப்போது வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்து, அவர்களின் நடவடிக்கைகள், எதில் அதிக ஈடுபாடு, ஆர்வம் என அறிந்து கொள்வது முக்கியம். ஏனென்றால், அவர்கள் கற்கப் போகும் கல்வியின் அடித்தளமே நர்சரி வகுப்பு தான்.

"ஒரு கை என்றும் ஓசை எழுப்பாது" என்ற முதுமொழிக்கு ஏற்ப ஆசிரியரோடு, பெற்றோரும் இணைத்து இளம் தலைமுறையை வழி நடத்தினால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது நிதர்சனமான உண்மை.

logo
Kalki Online
kalkionline.com