இசைக்கு இறைவனே இறங்கி வருவதாகக் கூறுவர் உலக நியதி அறிந்தோர்.
வேதங்கள் அனைத்தும் அமைதிக்கும் சமாதானத்திற்குமே வழி காட்டுகின்றன.
வழி ஒன்றே ஒன்றுதான். அன்புதான் அது! அன்பை அடிப்படையாகக் கொண்ட எந்தச் செயலும் வெற்றியில்தான் முடியும் என்பது அன்றாடம் உலகம் சந்திக்கும் நடைமுறை.
நேர்மையும், தன்னம்பிக்கையும், நன்றியறிதலும் கொண்ட மனிதர்கள் புகழேணியின் உச்சியை அடைவது உறுதி! உதாரணங்களாக ஆயிரக் கணக்கில் காட்டலாம்!
இருப்பினும் நமக்கு வேண்டியவர்களே மாதிரிகளாக அமைந்து சாதித்துக் காட்டும்போது நமது நம்பிக்கை பெருகுவதுதானே இயல்பு!
அக்காலப் பெரும்பாலான திரைப்படங்கள் பொருள் பொதிந்த பாடல்களைக் கொண்டிருந்தன. எக்காலத்திற்கும்… எல்லா மக்களுக்கும்… வழிகாட்டுபவையாக அமைந்திருந்தன. பல மனிதர்களுக்கு வழிகாட்டி, அவர்களை வாழ்வின் உயரத்திற்கு அழைத்துச் சென்றன. அப்படிப்பட்ட ஒரு பாடலையும் அதன் மூலம் உயர்ந்த ஒருவரையும் காண்போமா?
திரைத்துறை எத்தனையோ பேரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
அதே சமயம், எதிர் நீச்சல் போடச் சக்தியில்லாமலும், தன்னம்பிக்கையைத் தொடர்த் தோல்விகள் மூலம் இழந்திருந்ததாலும் ஏமாந்து போனவர்களும் ஏகப்பட்ட பேர் உண்டு. பாட்டெழுதித் தன் நிலையை உயர்த்திக் கொள்ளும் நோக்குடன் கோலிவுட்டில் வந்திறங்குகிறார் தென் மாவட்டக்காரர் ஒருவர். ஸ்டூடியோ ஸ்டூடியோவாக ஏறி இறங்குகிறார். அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் சான்ஸ் கேட்டு அலைகிறார்.
ம்ஹூம்! தேறுவதாகத் தெரியவில்லை. கையிலிருந்த காசும், மனதில் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கையும் மெல்லக் கரைகின்றன. விடாமுயற்சியுடன் போராடுகிறார். கோலிவுட் கதவுகள் ஸ்ட்ராங்க் போலும். எவ்வளவு தட்டியும் அசையவில்லை. அதற்கு மேல் தட்ட அவரிடம் தெம்பில்லை. சரி! ஊருக்குப் போய் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், சோக மனதுடன் பஸ் ஸ்டாண்ட் வந்து, டீக்கடை பெஞ்சில் ஓர் ஓரமாக அமர்கிறார். துக்கம் தொண்டையை அடைக்கிறது. வேதனையைப் பகிர்ந்து கொள்ளக்கூட யாருமில்லை அருகில்! பேருந்தும் உடன் வந்தபாடில்லை. நேரம் சரியில்லை என்றால் நேர்வதெல்லாம் விரும்பத்தகாதவையாகத்தானே இருக்கும்.
சுஜாதா கதைகளில் அதிர்ஷ்டமில்லா நாயகன் சொல்வான். ’என் நேரம்… நான் ரெஸ்ட ரூம் போனாக்கூட எனக்கு முன்னாடி சிறுநீர் கழிக்கிறவன் நீண்ட நேரம் கழிப்பான்!’ என்று. அதைப்போன்ற ஓர் அவதியில் உழல்கிறார் நம் நாயகரும்!
அப்பொழுதுதான் டீக்கடை ரேடியோவில் அந்தப் பாட்டு ஒலி பரப்பாகிறது.
மயக்கமா?கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
ஏதோ ஒரு மாத்திரை விளம்பரத்தில் “ஆமாம்ப்பா ஆமாம்!” என்பதுபோல் இவரும் ஆமாம்… ஆமாம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, ”சரி! விடுபட வழி இருந்தா சொல்லு!” என்பது போல் ஸ்பீக்கரைப் பார்க்கிறார். அது சொல்கிறது.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!
வாசல்தோறும் வேதனை இருக்கும்!
அதான் நிறைய இருக்கே... அதனால்தானே இந்தப்பாடு… போக்க வழி என்ன?- அவர் மனது கேட்க, ஸ்பீக்கர் பதில் சொல்கிறது-
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
அது எங்க ஓடுது? நம்மளைத்தானே ஓட விடுது! நானும் ஓடுறதுக்குத்தானே உட்கார்ந்து இருக்கேன். என்ன ஓடற தூரத்ல ஊர் இல்லாததால பஸ் ஏறி ஓடப்போறேன் என்று அவர் நினைக்கும்போதே அடுத்தவரி வந்து விழுகிறது!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
எனக்குத் தாங்கிக்கிடற மனசு இல்லங்கறியா? இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கச் சொல்றியா? ஊருக்குப் போகவா? வேண்டாமா? குழப்பிட்டியே! என்று அவர் உள்ளுக்குள் புலம்புகிறார்!
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு!
காவியம் பாடத்தானே சாமி வந்தேன்! ஒருத்தரும் பாடச் சொல்லிக் கூப்பிடலயே! என் மனசை மாளிகை ஆக்கத்தானே பாடுபடறேன். சரி! மற்றதையும் முழுசாச் சொல்லிப்பிடு!
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
அப்ப நாளைக்கும் முயற்சியைத் தொடரச் சொல்றியா? கையில காசு கொறைஞ்சு போச்சே. நீ சொல்றதைப் பார்த்தா ஊருக்குப் போகாதேன்னு சொல்ற மாதிரில்ல இருக்கு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி…
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!
நீ சொல்றது நெஜந்தான்! என்னைப்போல சென்னையைத் தொட முடியாதவர்கள்கூட நிறையப்பேர் உண்டுதான்!
சொல்லிட்டியில்ல… மறுபடியும் ஒரு ரவுண்ட் இறங்கிப் பார்த்துடறேன்!
சொல்லி விட்டு நம் நாயகர் மீண்டும் அறைக்குத் திரும்பி முயற்சியில் இறங்குகிறார். திறக்காத கதவுகளெல்லாம் அவருக்காகத் திறக்கின்றன. மெல்லப் புகழ் ஏணி அவரை உயரத்திற்குக் கொண்டு செல்கிறது!
அப்படி உயர்ந்தவர்தான் நம் கவிஞர் வாலி அவர்கள்.
அவரே ஒரு பேட்டியில் சொல்கிறார்!
“அந்த ஒரு பாடல்தான் என் வாழ்க்கையைத் திசை திருப்பியது. கீதை, குரான், பைபிள் மற்றும் பல வேத நூல்கள் எல்லாம் சேர்ந்து விளம்புவதை இந்த ஒரு பாடல் விளக்கியதாக உணர்ந்தேன். உழைத்தேன். உயர்ந்தேன். அது மட்டுமல்ல! நிறைவாகப் பாட்டு எப்படி எழுதுவது என்பதையும் இந்தப் பாடல் மூலமாகவே கற்றேன்!
கேள்விகளோடு நிறுத்தாமல் அதற்கு அருமையான பதிலையும் கூறி, கவிஞர் தனக்குத் துணையாக என்னையும் சேர்த்துக் கொண்டார்!”
திரைப்படங்களாலும், பாடல்களாலும் உயர்வு பெற்றோர் பலருண்டு. நான் முன்பே சொன்னதைப்போல சிறந்த உதாரணம் கவிஞர் வாலி அவர்கள்!
பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும், பாலை மட்டுமே பருகும் அன்னப்பறவை போல நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ளும் நல் நெஞ்சம் நமக்கிருந்தால் வாழ்வில் உயர்வது உறுதி! - கவிஞர் வாலி போல!
ஒரு கவிஞனை இன்னொரு கவிஞன் புகழும் இதுபோன்ற சம்பவங்களால்தான் நம் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது!
1962 ஆம் ஆண்டு வெளியான ‘சுமைதாங்கி’ படப் பாடலைத்தான் மேலே கண்டோம். பாடல் வந்து 63 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இன்னும் எத்தனை 63கள் தாண்டினாலும் இந்தப் பாடலுக்கு அழிவில்லை! கண்ணதாசனுக்கும், வாலிக்கும் அழிவே இல்லை!
வாழட்டும் அவர்கள் புகழ் - வையகம் நீளும் வரை!