ஆசை இல்லாத மனிதர்கள் உலகில் இல்லவே இல்லை. புத்தருக்குக்கூட 'ஆசையை ஒழிக்க வேண்டும்' என்ற ஆசை இருந்தது. நான் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்லப்போகிறேன்' என்று கிளம்பிப் பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் தொடங்கி, அறிந்த தெரிந்த அத்தனை பேரும் முதலில் கேலியாக சிரிப்பார்கள்.
ஒரு சாதாரண நடைபயிற்சிக்கே இத்தனை கிண்டல், கேலி என்றால், ஏதாவது புதுமையான முயற்சிகள் செய்யவேண்டும் என்று கிளம்பினால் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தியுங்கள். 'இவனெல்லாம் புதுசா பிசினஸ் செஞ்சா நாடு உருப்பட்ட மாதிரிதான் புதுசா செய்றதெல்லாம் ரிஸ்க். எப்பவும்போல பழைய பாணியிலேயே செய்' என்று ஆர்வத்துக்கு தடை போடத்தான் செய்வார்கள்.
இப்படிப்பட்ட கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் பயந்தே. ஏரானமான நபர்கள் தன்னுடைய திறமைகளை ஒளித்து வைத்துவிடுவார்கள். 'தம்மை விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை' என்ற உறுதியுடன், தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவர்கள் மட்டுமே வெற்றிக் கோட்டைத் தொடமுடியும் இதற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டாக திகழ்பவர்தான் மைக்கேல் பெல்ப்ஸ்.
சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒட்டுமொத்தமாக எட்டு தங்க மெடல் வாங்கி உலக சாதனை படைத்தவர்.
பெல்ப்ஸ்க்கு சின்ன வயதிலேயே 'ஏ.டி.எச்.டி. எனப்படும் அட்டன்ஷன் டிபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர்' என்ற பிரச்னை இருந்தது. இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர்களால் எந்த இடத்திலும் கொஞ்ச நேரம் கூட அமைதியாக இருக்கவோ, எந்தப் பாடத்திலும் முழுமையாக மனம் செலுத்தவோ முடியாது ஆசிரியர் சொல்லித் தருவதை கவனிக்கப் பிடிக்காது அதிக துடிதுடிப்புடன் ஏதாவது பிடித்த வேலையை மட்டும் தொடர்ந்து செய்வது, திடீரென கையில் இருக்கும் பொருட்களைத் தூக்கி எறிவது என்று ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.
இந்தக் காரணங்களால் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் முதல் உடன் படிக்கும் மாணவர்கள் வரை அனைவரது கேலிக்கும் ஆளானான். அதனால் பெல்ப்ஸை மட்டும் தனியே அக்கறை எடுத்து கவனிக்க முடிவெடுத்தார் அவனது தாயார் தெபோரா.
இதுவும் வீட்டில் பெரிய பிரச்னையாக உருவெடுக்க, கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்கள். தனி மரமாக இருந்த தெபோரா, உதவாக்கரை என்று சொல்லப்படும் மகனை உருப்படியான மனிதனாக்க முடிவெடுத்தார். அவனது விருப்பம் எதுவென அறிந்து நீச்சல் பயிற்சியில் இறக்கினார். முழு நேரமும் நீச்சலில் ஆர்வமாக, முழு கவனத்துடனும் செயல்பட்டார் பெல்ப்ஸ்.
இந்த உலகமே உன்னை புறக்கணிக்கிறது பெல்ப்ஸ். நீ சாதனைகள் செய்து வெற்றி பெறுவதன் மூலம் அனைவரின் வெல்ல வேண்டும் என்பதை தன் மகனுக்கு மந்திரம் போன்று ஓதினார் தெபோரா.
தன்னை கேலி பேசும் எவரிடமும் பதில் பேசுவது அல்லது சண்டை போடுவது தன்னுடைய வேலை இல்லை என்பதை உணர்த்திருந்தார் பெல்ப்ஸ். அதனால்தான் பேசுவதைவிட, தன்னைப்பற்றி இந்த உலகமே பேசும்படி செய்யவேண்டும் என்று முடிவுகட்டி முழுமையாக நீச்சலில் கவனம் செலுத்தினார். எந்த நேரமும் தண்ணீரிலேயே சாதனைக்காக தவம் கிடந்தார். அதற்கு பலன் ஒலிம்பிக் போட்டியில் கிடைத்தது.
மந்தபுத்திக்காரன், உதவாக்கரை, மூளை சரியில்லாதவன் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பெல்ப்ஸ் பெயரை உச்சரிக்காதவர்கள் இன்று எவரும் இல்லை. அவரது புகைப்படத்தை வெளியிடாத பத்திரிகைகள் இல்லை.
மாபெரும் குறையினால் பாதிக்கப்பட்ட பெல்ப்ஸ். அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பெல்ப்ஸ் உலக சாதனை புரியமுடியும் என்றால், நம்மால் முடியாத பிறர் புறக்கணிப்புகளுக்கு என்றும் இடம் கொடுக்காதீர்கள். அவர்களது விமர்சனத்துக்குப் பயந்து, ஆர்வத்தை மூட்டைகட்டி வைக்காமல், போராட்டக் களத்தில் குதியுங்கள். வெற்றிக்கனிகளை தட்டிப்பறியுங்கள்.