
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை உலகில் உள்ள அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு நாம் எப்படி முயல்கிறோம் என்பதில்தான், அதில் வெற்றி அடைவதற்கான தந்திரம் மறைந்துள்ளது. நம் வாழ்வில் சிறப்பாக செயல்படுவதற்கு பல விஷயங்களை முயற்சித்தாலும் பெரும்பாலான சமயங்களில் தோல்வியே கிடைப்பதால் துவண்டு விடுகிறோம். ஆனால் உங்களுடைய இலக்குகளை எட்டிப் பிடிக்க சரியான நேரத்தை நிர்ணயம் செய்தால் உங்களுடைய செயல் திறன் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் ஒரு செயலைச் செய்ய எவ்வளவு நேரம் நிர்ணயம் செய்கிறீர்களோ, அவ்வளவு நேரத்தை அது எடுத்துக் கொள்ளும். இதைத்தான் பார்க்கின்சன் விதி என்பார்கள்.
உங்கள் வேலைகள், திட்டங்கள் மற்றும் குறிக்கோள் களுக்கு பார்கின்சன் விதியை பயன்படுத்துவதே, மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.
இந்த விதியை நம் வாழ்வில் பல இடங்களை உணர்ந்திருப்போம்.
ஒரு வாரத்தில் நமக்கு தேர்வு நடக்கவிருந்தால், இறுதி ஓரிரு நாட்களில் தான் படிக்கத் தொடங்குவோம்.
அரைமணி நேர வேலையை முடிக்க ஐந்து மணி நேரம் இருக்கிறதன்றால், கடைசி அரை மணி நேரத்தில் தான் அதை முடிப்போம்.
பல மணி நேரத்தை வீணடித்துவிட்டு திடீரென்று ஒருநாள் அனைத்தையும் மாற்றப் போகிறேன் என்று செயலில் இறங்குவீர்கள்.
ஐபிஎல் போட்டியின் கடைசி சில நிமிடங்களில், அணிகள் தங்கள் முயற்சியை அதிகரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதில் ஒளிந்திருப்பது இந்த விதிதான். இதற்கு மேலும் அடிக்கவில்லை என்றால் எப்போது அடிப்பது என்று அதிரடி காட்ட முயற்சிப்பார்கள்.
இதுபோன்று பல நிகழ்வுகளை நீங்களே உங்கள் வாழ்விலிருந்து உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். இதிலிருந்து நாம் அறிவது, ஒரு வேலையைச் செய்ய குறைந்த நேரம் தான் இருக்கிறதென்றால், அங்கே உங்களுடைய செயல்திறன் அதிகமாக இருக்கும்.
இந்த பார்க்கின்சன் விதியை உங்களுடைய செயல்களில் பயன்படுத்துங்கள். நீங்கள் முன்பு நிர்ணயித்ததை விட மிகக் குறைவான காலக்கெடுவை அமைத்துக் கொள்ளுங்கள். இது முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தவும், கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், தள்ளிப்போடுவதை நிறுத்தவும் உங்களைத் தூண்டும்.