வாழ்வில் நிம்மதி வேண்டுமா? இந்த 5 விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! 

Want peace in life?
Want peace in life?
Published on

நாம் நம்முடைய வாழ்க்கையை நிம்மதியாக வாழ சில விஷயங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் நான் சொல்லப் போகும் விஷயங்களை நீங்கள் புரிந்து கொண்டால், வாழ்க்கையை முடிந்த அளவுக்கு எவ்வித சலனமும் இன்றி கொண்டு செல்லலாம். 

  1. ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்துவிட முடியாது: சில சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் அனைத்துமே கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். அல்லது ஒரே சமயத்தில் நம் வாழ்வில் எல்லாமே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் விரும்பும் அனைத்துமே உரையடியாக நடந்துவிடாது என்பது, சில பல துன்பங்களை அனுபவித்த பிறகுதான் நமக்கு புரிகிறது. எனவே வாழ்க்கையில் அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும் என துரிதப் படுத்தாமல். நாம் நம்முடைய செயல்களை சரியாக செய்தால் நடக்க வேண்டியது சரியாக நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

  2. சாதாரண வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி உள்ளது: ஆடம்பரமாக வாழ்வதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என பலர் தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சாதாரணமாக வாழ்வதிலேயே அதிக மகிழ்ச்சி ஒளிந்துள்ளது. எந்த அளவுக்கு நம்மிடம் குறைவான விஷயங்கள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நமக்கு குறைந்த சிந்தனைகள் இருக்கும். அதனால் நாம் மன நிம்மதியும் இருக்க முடியும். எனவே குறைவு தான் நமக்கு நிறைவு தரும். 

  3. நம் வாழ்வில் நுழையும் அனைவருமே ஒரு காரணத்துடன் தான் வருகிறார்கள்: நம் வாழ்வில் நம்மிடம் பழகும் நபர்களும், தொடக்கம் முதலே நம்முடன் இருக்கும் நபர்களும் ஒரு காரணத்திற்காக தான் நம்முடன் பழகுவார்கள். யாரும் எவ்வித காரணமுமின்றி நம்முடன் பழக மாட்டார்கள் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். இந்த மனநிலை நமக்கு ஏற்பட்டுவிட்டால், மனிதர்கள் நம்மை விட்டுப் பிரியும்போது அந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும்.

  4. வாழ்க்கையில் யாரும் நம்மை காப்பாற்ற மாட்டார்கள்: வாழ்க்கையில் எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதிலிருந்து நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இங்கே பலர் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இந்த குறிப்பிட்ட நபர் நம்மை காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருப்போம். ஆனால் உண்மையில் எல்லா தருணங்களிலும் நமது முயற்சி இருந்தால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். எனவே யாரையும் எதிர்பாராமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

  5. வாழ்க்கையில் எதற்கும் முடிவில்லை: வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமும் முடிவு பெறுவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள நாம் பல அனுபவங்களைப் பெற வேண்டியுள்ளது. நாம் நினைத்துக் கொண்டிருப்போம் இந்த வேலை கிடைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம். அல்லது இந்த ஒரு விஷயம் என் வாழ்வில் நடந்துவிட்டால் எனக்கு எல்லாம் கிடைத்துவிடும் என நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையில் நாம் கவலைப்பட ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கும். ஆங்காங்கே மகிழ்ச்சி அத்தி பூத்தார் போல தலையை காட்டும். இப்படித்தான் வாழ்க்கை நெடுகிலும் எல்லாமே முடிவின்றி நடந்து கொண்டே இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com