ஒரே சமயத்தில் ஒரு காரியத்திற்கு மேல் செய்ய இயலாது. அந்த ஒன்றில் முழு மனதையும் செலுத்தினால் அதைச் செம்மையாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம். விரைவாக ஒன்றை செய்து முடித்தோமானால் அடுத்த காரியத்தில் மனதைச் செலுத்தலாம்.
மனதைக் கட்டுப்படுத்தி அதை ஒருமுகப்படுத்தினால் பல காரியங்களைச் சுலபமாகச் செய்து முடிக்கலாம். அதில் ஒன்றில் தோல்வி ஏற்பட்டால் மனம் சோர்வு அடைந்து விடக்கூடாது. பெரிய பெரிய மகான்களெல்லாம் பல காலம் முயற்சித்தே வெற்றியடைந்திருக்கிறார்கள்.
சில சமயங்களில் செய்து வந்த வேலையில் மாற்றம் ஏற்படுவதும் நல்ல பலனை தருகிறது. ஒருவன் அலுவலகத்தில் ஏ.சி அறையில் அமர்ந்து நிர்வாகக் காரியங்களை கவனிக்கிறான். தொடர்ந்து ஒரே விதமான வேலையை தினமும் செய்வதால் அவனுக்கு சலிப்பு ஏற்படலாம். ஒரு வித நோயும் அவனைப் பற்றிக் கொள்கிறது. அவன் சிலநாள் வேறு வேலையில் ஈடுபட்டால் மனம் உற்சாகம் அடையும். அவன் திறமையும் அதிகரிக்கும். மீண்டும் பழைய வேலையை செய்யத் தொடங்கும்போது அவனுக்கு அதில் சலிப்போ, வெறுப்போ ஏற்படாது. மனதை பூரணமாக வேலையில் ஈடுபடுத்துவதால் வேலையும் எளிதில் முடிக்க முடியும்.
ஒருவர் ஒரு வேலையில் வெற்றி அல்லது தோல்வி அடைந்தாலும், அவர் அந்த வேலையில் ஈடுபட்டிருந்த நேரம் முக்கியமல்ல. அவர் எவ்வளவு தூரம் மனோசக்தியையும், உடல் உழைப்பையும் ஈடுபடுத்தினார் என்பதை முக்கியமாக கணக்கிட வேண்டும்.
ஒன்றை செய்து முடிக்க அதிக நேரம் முயற்சிப்பதனால் சோர்வடைந்து விடக்கூடும். அப்போது விட்டு விட்டு மீண்டும் மீண்டும் தளராமல் முயற்சிக்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் வேலையில் பல குறுக்கீடுகள், இடையூறுகள் தோன்றலாம். இடையூறுகளை கண்டு சலிப்படைபவனால் எதையும் முழுமையாக செய்ய இயலாது.
மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றில் ஈடுபட செய்வதால் பலவிதமான உடல், உள்ள நோய்கள் குணமாகும். மனம் ஒன்றில் ஈடுபடும்போது அமைதியாகி கவலைகள் அகன்று விடுகின்றன. தன்னம்பிக்கை உண்டாகிறது.
மனம் ஒரு பெரிய நூல் நிலையம் போன்றது. அதில் எவ்வளவு நூல்களை சேர்த்து வைத்தாலும், இன்னமும் நூல்களை வைக்க இடம் இருக்கும். மனதை நாம் எந்த துறையில் திருப்புகிறோமோ அந்தத் துறையில் சிந்திக்கிறது.
கணக்கிடும் கம்ப்யூட்டரிடம் நாம் எதை செய்ய கட்டளை இடுகிறோமோ அதை மாத்திரமே அது செய்யும். இதே முறையில்தான் மனமும் மற்ற துறைகளை ஒதுக்கி விட்டு நாம் தேர்ந்தெடுத்த ஒன்றை மட்டுமே சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகிறது.
முதலில் ஒரு சிறு காரியத்தை செய்து முடித்தால் பிறகு பெரியவற்றையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யலாம். இதற்கு மனதை ஒருமுகப்படுத்தினால் உடலும் அதற்கு இணங்கி செயல்பட தொடங்கிவிடும். உடலும், உள்ளமும் சேர்ந்து ஒன்றைச் செய்யத் தொடங்கினால் அது சுலபமாக பூர்த்தியாகிவிடும்.
சிறு குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்களை சாப்பிட கொடுத்து பழக்கிவிட்டால் அதற்கு பிறகு உப்பு, புளிப்பு, காரத் தின்பண்டத்தைக் கொடுத்தால் அது சாப்பிடாது. குழந்தை பசியுடன் எவ்வளவு துன்பப் பட்டாலும் இனிப்பு பண்டத்தை கொடுத்தால்தான் ஆசையுடன் சாப்பிடும். அது போலத்தான் மனமும். மனதை எந்த திசையில் பழக்குகிறோமோ அதே திசையில்தான் சென்று கொண்டிருக்கும் அப்படிப்பட்ட மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஈடுபட்டால் அது அளவற்ற சக்தியைக் கொடுக்கிறது.