உடல் வலிமை பெற வேண்டுமானால் மனம் வலிமையுடன் இருக்கவேண்டும். மனஉறுதி உடையவர்கள் நினைத்ததை எண்ணியவாறு அடையமுடியும். மனஅமைதியைப் பொறுத்தே உங்கள் செயல் உறுதியடைகிறது. மனஉறுதி உடையவர்கள் துன்பத்தில் துவண்டு விடுவதில்லை.
மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மனஉறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்...
மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர். குப்பைக் கழிவுகளை உரமாக்கிக் கொண்டு மலரவில்லையா குண்டு மல்லிகள்...? காய்க்கவில்லையா கொய்யாக் கனிகள்...?
வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் ஒவ்வொரு நாளும் மாலைகள் அவன் கழுத்திற்காக காத்துக் கிடக்கின்றது.
எதிரியின் கூடாரத்திற்கு உளவறியச் சென்றான் நெப்போலியன். பகைவரின் படைகள் அவனை கண்டுபிடித்துவிட வேகமாக குதிரையைச் செலுத்தினான்.
தப்பிப் பிழைப்பதற்குள் மூன்று திசைகளிலிருந்தும் எதிரியின் படைகள் நெருங்கி வந்தன. நான்காவது திசையை நோக்கினாலோ, ஆழமான பெரும் பள்ளத்தாக்கு. குதிரையால் முழுப் பள்ளத்தையும் தாண்டிவிட இயலாது என்பது நெப்போலியனுக்கே தெரியும். இருந்தும் மனதில் உறுதி இருந்ததால் குதிரையைச் செலுத்தினான் அவன். குதிரை பள்ளத்தாக்கின் முக்கால் பகுதியை தாண்டி விட, அது தவறி விழுவதற்கு முன்பே அந்தக் குதிரையின் மீது நின்றபடி தாவி, எதிர்புற மலைச்சரிவில் குதித்து தப்பித்தான் அம் மாவீரன்.
எதிரிகளே வியக்கும் வண்ணம் இப்பேற்பட்ட மனஉறுதி இருந்ததால்தான், ‘முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான்’ என்று சொல்ல முடிந்தது நெப்போலியனால்.
மனஉறுதி உடையவர்கள் துன்பத்தில் துவண்டு விடுவதில்லை. மன உறுதி உடையவர்களால்தான் பிறர்க்கு உதவவும் முடிகிறது. இந்தக் கருத்துக்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு உங்கள் மனஉறுதியே காரணம். இதுவரை ஏற்பட்ட சிக்கல்களுக்கு உங்களிடத்தில் மனஉறுதி இல்லாமையே காரணம் என்பதனை அறிவீர்கள்.
மனஉறுதி தளர்ந்தால் - எவ்வளவு திறமை இருந்தாலும்
எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் அது பயனற்றதாகிவிடும். எல்லோரையும் அயிர்ப்புக் கண்கொண்டு பார்க்க நேரிடும். எடுத்ததெல்லாம் தோல்வியில் முடியும்.(அயிர்ப்பு- சந்தேகம்)
மனஉறுதி தளர்ந்த மனிதன் குனிந்தே நடப்பான்; வழியை விட்டு ஒதுங்கியே நடப்பான். ஒதுங்கி நடக்க நடக்க, உலகம் உங்களை ஒதுக்கி வைத்துவிடும். ஒரு கருத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புகளால் சுடர் விட்டு ஒளிர்ந்திட இயலாது.
எனவே!, எந்த செயலானாலும் சரி, மனஉறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்.