.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்ற வடிவேலுவின் டயலாக் சரிதான். ரிஸ்க் எடுப்பவர்கள் சிறந்த முடிவுகளை தருவார்கள். ஆனால் அவர்கள் எந்த வகையான ரிஸ்க் எடுப்பவர்கள் என்பதை பொறுத்துதான். தவறுகள் செய்வது மனிதனின் இயல்பாகும். ஆனால் அந்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வது சிறந்த பாடமாக இருக்கும்.
இந்த அனுபவத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ளவும், வளரவும், நன்கு பரிணமிக்கவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கவும் நம்மால் முடியும். சில மனிதர்கள் அல்லது குழுக்கள் தவறு செய்பவர்களை மன்னிக்காதவர்களாக இருந்தாலும் தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் தயாராக உள்ளனர்.
தவறு செய்யாதவர்கள் வாழ்வில் எதனையும் கற்றுக் கொள்வதில்லை. தனிநபர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும், அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும், இறுதியில் தங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக வளரவும் வேண்டும். அதற்கு இந்த சமூகம் அவர்களை ஒதுக்காமல் இருந்தால்தான் நேர்மறையான பங்களிப்பை அவர்களால் வழங்க முடியும்.
சிலர் தங்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாது திரும்பத் திரும்ப தவறுகளை செய்கிறார்கள் என்றால் அவர்கள் அதற்கான காரணத்தை சிந்திக்க நேரம் ஒதுக்காததுதான். தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை என்றால் வாழ்வில் வளர்ச்சி ஏற்படாது.
ஏன் இந்த தவறு நேர்ந்தது, இதை எப்படி நிவர்த்தி செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் மீண்டும் அந்தத் தவறு நேராது. இதனால் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் திறன் ஏற்படுகிறது. தவறுகளை முட்டாள்தனத்தின் அறிகுறிகளாக பார்க்காமல் அதன் மூலம் நாம் கற்றுக் கொண்டதை அறிந்து பெருமைப் படுவதுடன் வாழ்வில் முன்னேற முயற்சிகள் எடுக்க வேண்டும்.
ஒரு வெற்றிகரமான மனிதரிடம் "உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன" என்று கேட்க அவர் "சரியான முடிவுகளை எடுப்பதுதான்" என்றார். நீங்கள் எப்படி சரியான முடிவுகளை எடுப்பீர்கள் என்றதற்கு "அனுபவம்தான்" என்று பதிலளித்தார். அப்படியானால் அந்த அனுபவத்தை எப்படி பெறுவது? என்று கேட்க மோசமான முடிவுகளை எடுப்பது மூலம் அந்த அனுபவத்தை பெறலாம் என்று பதில் அளித்தார்!
அனுபவத்தால் மட்டுமே வாழ்க்கைப் பாடங்களை பெற முடியும்.
வெற்றிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் இருக்கக் கூடும் என்பதை தோல்வி நமக்கு கற்றுத் தருகிறது. நம் கனவுகளை அடைய ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளது என்பதையும் நாம் அடையும் தோல்விதான் நமக்கு கற்பிக்கிறது.
தோல்வி நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் உண்மையான இயல்பை காட்டுவதுடன் நம் சொந்த பலத்தையும் முன்னுக்கு கொண்டு வருகிறது. இது நமக்கு சிறந்த திறன்களையும், புதிய உயிர் வாழும் நுட்பங்களையும் கற்றுத் தருகிறது. உலகத்தைப் பற்றிய நமது அறிவையும் மேம்படுத்துகிறது.