
பறவைகள் மனித இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. புறாக்கள், குருவிகள், கிளிகள் என வீட்டில் செல்லங்களாக வளர்க்கிறோம். பாசத்தைப் கொட்டுகிறோம். பதிலுக்கு அவைகளும் நம் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன. சில பாடங்களை சொல்லித் தருகிறோம். நாமும் அதனிடத்தில் இருந்து சிலப் பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம்.
நெருப்பில் விழுந்தாலும் வீறு கொண்டு எழுந்து, வானில் எட்டாத உயரத்தில் கம்பீரமாக வலம் வருமாம் பீனிக்ஸ் பறவை. இப்பறவை சாம்பலில் இருந்து எழும்புவதின் மூலம் புதிய வாழ்க்கையை பெறுகிறதாம்! தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாகக் கூறப்படுவது, இந்த பீனிக்ஸ் பறவை ஆகும். வீழ்ந்தாலும் எழலாம் என்ற நம்பிக்கை ஊட்டுவது தான் பீனிக்ஸ்!பீனிக்ஸ் பறவையல்ல... நம்பிக்கையே!
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியில் பீனிக்ஸ் பறவையின் உருவம் இடம் பெற்றுள்ளது. இதனுடைய வலிமை, பண்புகள், அறிவு மிக அழகாக இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பீனிக்ஸ் பறவை சிலையாக பறக்கிறது. வீழ்த்தவே முடியாத ரோமானிய அரசின் மாபெரும் அடையாளமாகவும் இருக்கிறது.
நம்பிக்கை என்பது ஒருவரின் உறுதியான மனப்போக்கு. நேர்மறையான சிந்தனைகளை நோக்கி அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை எதிர் கொள்ளவும், வெற்றி பெறவும் நம்பிக்கை உதவுகிறது.
முப்பதாயிரம் காலாட்படைகள், ஐயாயிரம் குதிரை வீரர்களுடன் பாரசீகப் படையெடுப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான், மாவீரன் அலெக்சாண்டர். பாரசீகப் படையெடுப்புக்கு முன்பு அலெக்சாண்டரிடம் குறைவான அளவு பொருள்களே இருந்தன.
ஆனாலும், பயணத்திற்கு முன்பு தம் படை வீரர்களின் செல்வ நிலையை விசாரிக்கிறான். படை வீரர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் அவர்களுக்குச் செய்கிறான். நண்பன் ஒருவனுக்கு நிலப்புலன்கள் அளிக்கிறான். வேறொருவனுக்கு ஒரு மாவட்டத்தின் வருமானத்தையே வழங்குகிறான். இன்னொருவனை சிறந்த பதவியில் நியமிக்கிறான். இவ்வாறு தன்னிடம் இருந்த அனைத்தையும் அன்பர்களுக்கு அள்ளி அள்ளி வழங்குகிறான்.
தந்தை தனக்கு அளித்த அரசையே அனைவருக்கும் பங்குப் பிரித்து கொடுத்து விடுகிறான். அப்போது, அலெக்சாண்டரின் நண்பன் பெர்டிகாஸ் அக்கறையோடு ஒரு கேள்வி கேட்கிறான். “அரசே! இப்படி எல்லாவற்றையும் எல்லோருக்கும் அள்ளி அள்ளி கொடுத்து விட்டீர்களே! உங்களுக்கென்று என்ன வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?“
புன்முறுவல் பூக்கிறான், அலெக்சாண்டர்! “நம்பிக்கை எனும் அழியாத செல்வம் தான் என்னிடம் உள்ளது“ என்கிறான், அலெக்சாண்டர்.
நம்பிக்கை கொண்டிருக்கும் போது, மூளை நம்மை மகிழ்ச்சியாகவும், உந்துதலாகவும் உணர வைக்கும் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. நம்பிக்கை கொள்ளும் போது, கடினமான நேரங்களையும், எளிதாக கையாள முடியும். சவால்களை, தடைகளை எதிர்கொள்ளும் போது வளர்வதற்கான ஒரு பாடமாகவும், வாய்ப்பாகவும் கருதும் கருத்தாளனாக உணர முடியும்.
ஒரு கண்ணாடிக் குடுவையில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நம்பிக்கை உள்ளவன் பார்க்கும் பொழுது குடுவையில் பாதி வரை தண்ணீர் இருக்கிறது என்று நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக கூறுகின்றான். பாதிக் குடுவை அளவு தண்ணீர் தானே இருக்கிறது. குடுவை நிறையத் தண்ணீர் இல்லையே என்று கவலை கொள்ளக் கூடாது. ஆம், நம்பிக்கை ஒரு அற்புதமான சக்தி!
நம்பிக்கை என்பது சிறிய தீப்பொறி! வாழ்க்கையை ஒளிரச் செய்வது. வெற்றி, மகிழ்ச்சியை நோக்கி நம்மைத் தூண்டக்கூடியது.