

தவறான கண்ணோட்டம் கொண்டவர்களிடம் நம்மைப் பற்றித் தற்காத்துப் பேசுவதும், அவர்களை மாற்ற முயல்வதும் சில நேரங்களில் தேவையற்ற ஆற்றல் விரயம் என்பதை இந்தப் பன்றிக்குட்டி கதை அழகாக உணர்த்துகிறது.
ஒரு ஊரில் இரண்டு உறவினர்கள் இருந்தார்கள். இருவருடைய வீடுகளும் பக்கத்து பக்கத்திலேயே இருந்தன. அதில் ஒருவருக்கு இன்னொருவரைப் பிடிக்காது; அவரை எப்போது பார்த்தாலும் தவறாகப் பேசிக்கொண்டும், விமர்சித்துக்கொண்டும் இருப்பார். இது இன்னொரு உறவினருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும்.
அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். ஆனால், 'இந்த ஒரு நபர் மட்டும் தன்னைத் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறாரே!' என்று அவர் எவ்வளவோ புரியவைக்க முயற்சிப்பார். ஆனால், எந்தப் பயனும் இருக்காது.
ஒருநாள், விமர்சிக்கப்படும் அந்த நபரின் வீட்டில் ஒரு பன்றிக்குட்டியை வாங்கியிருந்தார்கள். அவர் வீட்டுச் சிறுவன் ஒருவன், தினமும் அந்தப் பன்றிக்குட்டியின் முன்பு உட்கார்ந்து பாடுவான். இதைக் கவனித்த அந்த நபர் அந்தப் பையனிடம்,
"உனக்குப் பாடப் பிடிக்குமா? அல்லது அந்தப் பன்றிக்குட்டிக்கு நீ பாடுவது பிடிக்குமா? ஏன் தினமும் அதன் முன்பு அமர்ந்து பாடுகிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பையன், "என்னுடைய நண்பன் வீட்டில் கிளி வளர்க்கிறான். அது அவன் பாடுவதைக் கேட்டுப் பாட ஆரம்பித்துவிட்டது. அது போலவே, இந்தப் பன்றிக்குட்டி முன்பும் நான் பாடினால், அதுவும் என் பாட்டைக் கேட்டுப் பாடும் என்று நம்புகிறேன்," என்று கூறினான்.
இதைக் கேட்ட அந்த நபருக்குச் சிரிப்பு வந்தது. அவர், "கிளியினுடைய தொண்டை அமைப்பு பாடுவதற்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. ஆனால், பன்றிக்குட்டியின் தொண்டை அமைப்பு பாடுவதற்கு ஏற்றது அல்ல. எனவே, எத்தனை நாள் ஆனாலும் அது திருப்பிப் பாட முடியாது," என்று கூறினார்.
இதைச் சொல்லும்போதே அவருக்குப் புரிந்தது - நாமும் இப்படித்தானே செய்கிறோம்! நம்மைப் பற்றித் தவறாக எண்ணுபவர்களின் மனதை மாற்றி, நம்மைப் பற்றிப் புரியவைத்துவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவருக்குத் தோன்றியது.
தகுதி இல்லாதவர்களிடம் நம் நியாயங்களை நிரூபிக்க முயற்சிப்பது நேர விரயமே. சில மனிதர்களின் சுபாவத்தை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து விலகி இருப்பதே மன அமைதிக்கு வழி.