வித்திட்ட மூன்றாம் மாதம் முளை விட்டேன்
சத்தூட்ட தொப்புள் கொடி பற்றிக் கொண்டேன்
கைகளைக் கட்டி கால்களை மடக்கிய எனக்கு
உயிர் ஊட்டிய உனக்கு சிரம் தாழ்த்துகிறேன்
தாயே, உன்னை வணங்குகிறேன்!
ஐந்தாம் மாதம் ஆரம்பம் ஆச்சு
ஆனந்த வைபவம் தொடங்கியாச்சு
உன் வாழ்க்கையின் கசப்புகள் அகன்றுவிடும்
வேப்பிலைக் காப்பை போல் கழன்றுவிடும்
தாயே, உன்னை வணங்குகிறேன்!
பொன்னும் வெள்ளியும் வளைந்தது உனக்குக் காப்பாக
நானும் வளைந்தேன் கருப்பையில் உனக்கு தோதாக
இனி உன் வாழ்க்கையில் வசந்தம் மிளிரட்டும்
உன் எண்ணங்கள் எல்லாம் இனிக்கட்டும்
தாயே, உன்னை வணங்குகிறேன்!
உனக்குப் பிடித்ததை உண்ணலாம் ரசிப்பதைப் பார்க்கலாம்
நினைத்ததை நடத்தலாம் கேட்டதைப் பெறலாம்
உன் சொந்தங்கள் உன்னைச் சுற்றிவரும்
பல பந்தங்கள் உன்னைப் பார்த்து மகிழும்
தாயே, உன்னை வணங்குகிறேன்!
பொன்னும் பொருளும் உன் சொத்தாக
அதை ஆளும் சுதந்திரம் உன்னதாக
ஊரும் உறவும் அறிந்தது உன் தாய்மை
வண்ண வளையல்கள் ஒலித்தன உன் பெருமை
தாயே, உன்னை வணங்குகிறேன்!
பூவும் சூடி பொட்டும் இட்டு சந்தனம் பூசிய
கைகளில் கணக்காய் அடுக்கிய வளையல்கள் ஜொலிக்க
குளிரும் மனதுடன் குலமகள் மங்களம் பெருக
என்றும் இருப்பேன் நானும் உனக்குத் துணையாக...
தாயே, உன்னை வணங்குகிறேன்!