

எப்பொழுதும் பாசிட்டிவான வார்த்தைகளை பேசும் போது அது மனதிற்கு ஒரு நல்ல தாக்கத்தை கொடுக்கும் . இதனால் தவறு செய்யும் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை திருந்தி விடுவதுண்டு. இப்படி பேசியதால் ஒரு குழந்தையின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை இப்பதிவில் காண்போம்.
என் தோழி அவளின் பேரக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டு வதற்குள் பெரும்பாடாகி விடுவதாக அலுத்துக் கொள்வாள்.
குழந்தையும் வாயை மூடிக்கொண்டு திறக்கவே திறக்காது. குழந்தையின் தாயோ ஆபீசுக்கு சென்று விட தோழிக்கு குழந்தையை கவனித்துக் கொள்வது பெரும்பாடாகிவிடும்.
பிறகு குழந்தையை கடைகளுக்கு காய்கறி வாங்கச் செல்லும் பொழுது அழைத்துச் செல்வாள். அருகில் உள்ள பாத்திரக் கடையில் அழகழகான கிண்ணங்களை வாங்கி வந்து அதில் உணவூட்ட பழக்கினாள். காய்கறிகளின் அருமை, பெருமையை குழந்தைக்கு எடுத்துச் சொல்லுவாள். அது புரிந்தும் புரியாமலும் சிரிக்கும். என்றாலும் அவர்கள் வீட்டிற்கு வரும் மற்றவர்களிடம் குழந்தைகளின் குணம் சாப்பாட்டு பழக்கத்தை மற்றவர்களிடம் பாராட்டி பேச ஆரம்பித்தாள். என் பேரன் ஒரு பருக்கை கூட சிந்த மாட்டான். நன்றாக சாப்பிடுவான். தொல்லையே தர மாட்டான் என்று பேரனைப் பற்றி எல்லோரிடமும் பாராட்டுதலாக பேச, பேரன் மனதில் ஒரு உற்சாகம் பீறிட ஆரம்பித்தது.
அதன் பிறகு சாப்பாட்டு தட்டில் பாட்டியின் கையிருந்தால் அதை விலக்கிவிட்டு அவனாகவே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். காய்கறி போன்றவற்றை விரும்பி எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். பாவக்காய், கொத்தவரங்காய் போன்ற ஒரு சில காய்களை மட்டும் ஒதுக்கி விடுவான். மற்றபடி கீரை, கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதெல்லாம் பழகி விட்டான். ஆதலால் பாராட்டு என்பது எவ்வளவு ஆர்வத்தையும் பொறுப்பையும் உண்டாக்குகிறது என்பதை அந்த குழந்தையின் மூலமே நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது. குழந்தையைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறாமல் புகழ்ந்து பேசுங்கள். அது அவர்களது மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் என்பது உறுதி.