
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் சுய ஒழுக்கம் என்பது இன்றியமையாத காரணியாக உள்ளது. சுய கட்டுப்பாடு உள்ள மனிதன் மட்டுமே சுதந்திரமான வெற்றியடைகிறான். ஒரு பாறையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு நெம்புகோல் உதவி புரிகிறது. அதேபோல் செயல்படாத மனிதனை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்க மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. என்னதான் மோட்டிவேஷன் தேவை என்றாலும் அவனுடைய செயல்பாடுகளே அவனை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
அதிலும் பிடித்த வேலையை முழு மனதுடன் செய்யத் தயாராகும்போது அதற்கான கால அட்டவணையை முதலில் தயாரித்து அதன்படி செயல்பட வேண்டும். சில நாட்கள் கழித்து இந்த வேலை வேண்டாம். அடுத்த வேலை செய்வோம் என மற்றொரு எண்ணம் உதயமாகாமல் தடுப்பதற்கு சுய கட்டுப்பாடு என்ற ஒன்றே சிறந்த மருந்தாகிறது.
இப்படியே குரங்கு போல் ஒரு வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு சென்றால் சுதந்திரமாக இருக்கலாம் என்பது தவறான கண்ணோட்டம் ஆகும். இதை ஒரு முறை முடிவு செய்துவிட்டால் நம்மால் பணம் சம்பாதிக்கவும் முடியாது, நம்முடைய இலக்கை அடையவும் முடியாது. வாழ்க்கை முழுவதும் இப்பணியே நம்மை ஆட்கொண்டு நாம் இருக்கும் நிலையை விட்டு மேலே செல்ல அனுமதிக்காது.
ராணுவ வீரர்களை பார்க்கும்போது அனைவருக்கும் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையை இருப்பதை பார்த்திருப்போம் .அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய கட்டுப்பாடான வாழ்க்கை முறை. இந்த கட்டுப்பாடான வாழ்க்கை முறையே அவர்களுடைய உயிரை போர்க்களத்தில் காப்பாற்றுவதோடு, தன்னுடன் போரிடும் மற்ற ராணுவ வீரர்களையும் காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கிறது.
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் இந்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் நம்மால் முயன்ற அளவு செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி அதனை அடிக்கடி மனதில் கூறிக் கொள்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் அதிகரித்து நாம் புத்துணர்ச்சி அடைகிறோம். என்னால் முடியாது என்ற வார்த்தையை ஒரு துஷ்ட சக்தியாகவே கருதி மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
மார்க்கெட்டில் ஒரே பொருள் பல்வேறு விலைகளில் விற்கப்படுவதற்கு அதனுடைய பிராண்ட் மிகவும் முக்கியமாகிறது. அதேபோல் நாம் வேலை செய்யும் இடத்திலும் நம்முடைய ஊதியத்தை நிர்ணயிப்பது நம்முடைய செயல்பாடுகளே. அத்தகைய சிறந்த செயல்பாடுகளுக்கு நம்முடைய சுய ஒழுக்கங்களே பின்புலமாக இருக்கின்றன.
நம்முடைய சிறந்த நாளின் தொடக்கத்தை சூரிய ஒளிக்கு முன்பாக எழுந்து நம் அன்றாட பணிகளை ஆரம்பிக்க வேண்டும். காலை வேளையில் நம்முடைய மனதிடம் இன்றைய நாள் எனக்கு கிடைத்த வரம். இந்த 24 மணி நேரத்தில் நான் தோற்கக் கூடாது. நான் செய்யும் வேலைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாகவும் முழு ஈடுபாட்டுடனும் செய்வேன். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் எந்த வேலையில் இருந்தும் பின் வாங்க மாட்டேன். என மனதிற்குள் கூறிக்கொள்ள வேண்டும்.
இதனை நாளடைவில் கடைபிடிக்க ஆரம்பிக்கும் போது நம் மனதின் ஆழமான வார்த்தைகளாக உருமாறி நம் உடலில் உள்ள மூளைக்குச் சென்று ,நரம்பு தசைகளில் புத்துணர்ச்சி பரவ ஆரம்பித்து வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.