ஒரு விஷயத்தில் நமக்கு இருக்கும் தன்னம்பிக்கை தான் நமக்கு முன்னால் உள்ள சவால்களை நாம் எப்படி பார்க்கிறோம் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்கிறோம் என்பதை நிர்ணயம் செய்கிறது. ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பதில்லை.
தன்னம்பிக்கையை வளர்ப்பதென்பது ஒருவருக்கு இருக்கும் சந்தேகத்தையும், பாதுகாப்பின்மையையும் ஒதுக்குவது அல்ல. அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுவது தான். உண்மையான தன்னம்பிக்கை என்பது உங்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என பிறருக்கு காட்டுவதல்ல. உங்களால் உண்மையிலேயே ஒரு விஷயத்தை எவ்வளவு தைரியமாக செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிவது தான்.
எனவே உண்மையான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
உங்களால் முடிந்ததை எதிர்பாருங்கள்: எப்பொழுதுமே ஒரு இலக்கை நிர்ணயம் செய்யும்போது 'Dream Big' எனச் சொல்வார்கள். ஆனால் இங்கே பெரும்பாலானவர்கள் தங்களால் அடைய முடியாத இலக்குகளை நிர்ணயம் செய்துகொண்டு பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள். பெரிய இலக்குகளுக்கு முயற்சிப்பது தவறல்ல, ஆனால் அதை அடைவதற்கான ப்ராசஸ் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். எனவே பெரிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கு முன் முதலில் அந்த இலக்கு பற்றிய எல்லா விஷயங்களையும் அறிவதை முதல் இலக்காக வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் யார், உங்களின் திறன் என்ன, எப்படி சிந்திக்கிறீர்கள், எதுபோன்று செயல்படுகிறீர்கள் மற்றும் உங்களுடைய பலம் பலவீனத்தைப் புரிந்து கொள்வதில் தான் உண்மையான தன்னம்பிக்கை ஒளிந்துள்ளது. உண்மையிலேயே தன்னம்பிக்கை உடையவர்கள் தன்னைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். பாதிப்புகளை எதிர்கொள்வதும், அவமானங்களைப் பயமின்றி ஏற்றுக்கொண்டு உங்கள் பலவீனங்களை ஆராய்வது தான் உண்மையான தன்னம்பிக்கையைப் பெறுவதற்கான ஒரே வழி.
கடின உழைப்பை நம்புங்கள்: உண்மையான தன்னம்பிக்கை என்பது ஒருவரின் கடின உழைப்பால் கட்டமைக்கப்படுகிறது. தோல்வியைக் கண்டு அஞ்சி எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால், உங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படாது. எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டு இருந்தால் பாதுகாப்பின்மை உணர்வு உங்களை முடக்கிவிடும். உங்களை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தி, செய்யும் செயல்களின் முடிவுகளை ரசிக்கும்போது உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.
அமைதியான ஈகோ: பொதுவாகவே ஈகோ என்பது திமிராக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் அமைதியான ஈகோவானது உங்களின் ஆதிக்கத்தை பிறரிடம் காட்டாமல், நீங்கள் செய்யும் செயல்களின் மீது ஒரு ஈகோவை வளர்த்துக் கொள்வதாகும். அதாவது நீங்கள் இருக்கும் சூழ்நிலையின் நன்மை தீமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்தால், தன்னம்பிக்கை தானாக வரும்.
நல்லது கெட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தால் என்ன செய்வீர்கள்? உதாரணத்திற்கு நீங்கள் கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தால், உங்களுக்கு கணிதம் சுத்தமாக வராது என நினைப்பீர்களா? இவ்வாறு நினைப்பவராக இருந்தால், உங்களுக்கு கிடைத்த முடிவுகள் நீங்கள் செய்த செயல்களாலேயே வந்தது என்பதை உணருங்கள். வெற்றி மற்றும் தோல்வியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதிலும் உங்களுடைய தன்னம்பிக்கை தீர்மானிக்கப்படுகிறது.
நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்திலும் நம்பிக்கையுடன் இருப்பது அவசியம். உண்மையான தன்னம்பிக்கை என்பது உங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைப்பதல்ல. உங்களின் உண்மையான பலம் மற்றும் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நல்லது கெட்டது ஆகியவற்றைப் புரிந்துகொண்டு, கடினமாக உழைத்து உங்கள் தரத்தை மேம்படுத்துவது தான்.