ஒருவருடைய வாழ்க்கையில் காதல், திருமணம் என்ற உறவு மிகவும் முக்கியமானது. ஆனால், அனைவருமே கட்டாயம் திருமணமோ அல்லது காதலோ செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் சிங்கிளாக இருப்பதிலும் பல நன்மைகள் இருக்கின்றன. இந்தப் பதிவில் ஒருவராக சிங்கிளாக இருப்பதில் உள்ள நன்மை, தீமைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சிங்கிளாக இருப்பதன் நன்மைகள்:
சிங்கிளாக இருப்பதின் மிகப்பெரிய நன்மை, தனிமை மற்றும் சுதந்திரம். தனது நேரத்தை தானே திட்டமிட்டு தனது விருப்பப்படி வாழலாம். வேறு யாரையும் கருத்தில் கொள்ளாமல் தனது சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
தனியாக இருக்கும் காலத்தில் தன்னைத்தானே நன்கு புரிந்து கொள்ளவும், தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய திறமைகளைக் கற்றுக் கொள்ளலாம், பல இடங்களுக்கு பயணம் செய்து புதிய நபர்களை சந்திக்கலாம்.
சிங்கிளாக இருப்பதால் தொழில் வளர்ச்சியில் முழுமையான கவனம் செலுத்த முடியும். உறவு மற்றும் குடும்பப் பொறுப்பு என எதிலும் கவனம் சிதறாமல் இருக்கும். மேலும் பல புதிய நண்பர்களை சேர்த்துக்கொண்டு, சமூக வாழ்க்கையை மேம்படுத்தலாம்.
சிங்கிளாக இருக்கும்போது உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். இதனால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, யாரையும் சாராமல் வாழும் நுட்பத்தை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
சிங்கிளாக இருப்பதன் தீமைகள்:
சிங்கிளாக இருப்பதால் சில சமயங்களில் ஒற்றுமை உணர்வு இல்லாமல் போகலாம். குறிப்பாக, குடும்ப நிகழ்ச்சிகள், சமூக நிகழ்வுகளில் தனியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த சமூகத்தில் திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் மீது பல விதமான அழுத்தங்கள் இருக்கும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் என திருமணம் பற்றி கேள்வி கேட்பது, திருமணம் செய்யாதவர்களை குறை சொல்வது போன்ற சில பொதுவான பிரச்சனைகள் இருக்கும்.
தனியாக இருப்பதால் சில சமயங்களில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படலாம். குறிப்பாக, வயதாகும்போது நோய்வாய்ப்பட்டால் யார் கவனிப்பார்கள் என்ற அச்சம் ஏற்படும். இதனால், தனிமை உணர்வு அதிகமாக இருக்கும். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தனிமையில் இருப்பது மோசமான உணர்வைத் தரும்.
சிங்கிளாக இருப்பவர்கள் மீது எதிர்மறையான கருத்துக்கள் திணிக்கப்படுகின்றன. திருமணம் செய்யாதவர்களை அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றும், குறை உள்ளவர்கள் என்றும் கருதுவது மோசமான அனுபவத்தை ஏற்படுத்தும்.
இப்படி, ஒருவர் சிங்கிளாக இருப்பதில் பல நன்மை தீமைகள் இருக்கின்றன. ஆனால், இதில் எது சிறந்தது என்பதை ஒவ்வொரு தனி நபரும் அவர்களது சூழல் மற்றும் தேவைகளைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும். சிங்கிளாக இருப்பதை ஒரு நேர்மறையான அனுபவமாக மாற்றிக்கொள்ள தன்னைத் தானே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.