.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
குறுகிய காலத் தோல்விகளில் விரக்தி அடையா வண்ணம் நீண்ட தூர இலக்குகளைக் கொண்டிருங்கள். - Charles C.Noble.
சார்லஸ் கார்மின் நோபல் அமெரிக்க மேஜர் ஜெனரல் மற்றும் பொறியாளர் ஆவார், மன்ஹாட்டன் திட்டத்தில் பணிபுரிந்தத இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நியூரம்பெர்க்கில் கட்டுமானத்தை வழிநடத்தி பெயர் பெற்றவர். ஆரம்பகால அமெரிக்க ஐசிபிஎம் திட்டத்தை உருவாக்கி தலைமைப் பொறியாளராக இருந்த சிறப்புக்குரியவர்.
இவர் மேலே கூறிய வெற்றிக்குத் தேவையான உந்து சக்தி பொன்மொழியை கவனத்தில் கொள்வோம். சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்கும் ஐபிஎஸ் அதிகாரி அம்பிகா பற்றி பார்ப்போம். 10 வகுப்பை நிறைவு செய்யாத நிலையில் காவலருடன் 14 வயதில் திருமணம். 18 வயதில் இரு குழந்தைகள் எனச் சென்ற அம்பிகாவின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது கணவருடன் சென்ற குடியரசு தினவிழா.
கணவர் அங்கு வந்த உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பதைக் கவனித்தவர் அவ்வளவு மரியாதைக்குரிய அவர்கள் யார்? அவர்கள் பதவி பணி பற்றி விசாரித்ததில் நாட்டின் உயரிய மக்கள் சேவைப் பணியான ஐபிஎஸ் பற்றித் தெரிந்து அவர்கள் போல தானும் ஆக வேண்டும் என்ற தனது நீண்ட தூர இலக்கை நோக்கி பயணப்பட்டார். அவர் குழந்தைகள் குடும்பத்தை விட்டு பல்வேறு கடினமான காலங்களை எதிர்கொண்டபோதும் தனது இலக்கை ஒருபோதும் கைவிடவில்லை,
தனது கணவர் குடும்பத்தினரின் ஆதரவுடன் அவர் முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை முடித்து பட்டப்படிப்பையும் முடித்தார். ஆனால் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றால், அம்பிகா UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வுக்குத் தயாராகி சென்னைக்கு சென்றார். ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்று முறை தோல்வியடைந்தார். மூன்று முறை தேர்வில் தோல்வியடைந்த அம்பிகாவை அவரது கணவர் வீட்டுக்குத் திரும்பச் சொன்னார். ஆனால் அம்பிகா விடவில்லை. இறுதி வாய்ப்பாக தேர்வில் கலந்துகொள்ள தன் கணவரிடம் அனுமதி கேட்டு 2008 ஆம் ஆண்டு 4 வது முயற்சியாக UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது கனவை நிஜமாக்கினார். தற்போது ஐபிஎஸ் ஆக உள்ள அவருக்கு சல்யூட்டுகள் கிடைக்கிறது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பாட்மிண்டனில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற வீராங்கனை சாய்னா நேவால் இந்திய இளைஞர்கள் மற்றும் ஒலிம்பிக் கனவு காண்பவர்களுக்கு முன் மாதிரியானதை அறிவோம். அதன் பிறகு காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உட்பட மேலும் பல பதக்கங்களை அவர் வென்றுள்ளார். இவர் கூறுவது இதுதான் "நான் சிறந்தவளாக இருக்க விரும்புகிறேன், இது தரவரிசையைப் பற்றியது அல்ல, அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையானதாக இருப்பது பற்றியது."
இங்கு குறிப்பிட்ட இருவரின் சாதனைகள் உதாரணம்தான். தோல்விகள் இன்றி வெற்றிகள் வசமாகாது. சார்லஸ் கூறியதுபோல் குறுகிய காலத் தோல்விகளைக் கண்டு துவளாமல் நீண்டதொரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணித்து நிலையான வெற்றி பெறுவோம்.