பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கடி கேள்வி கேட்க தயங்காதீர்கள் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இருந்தாலும் எல்லா மாணவர்களும் கேள்விகள் கேட்பதில்லை. பலர் மற்றவர்கள் கேட்கட்டும் என ஒதுங்கி விடுகின்றனர். கேள்விகள் கேட்பது தங்கள் அறியாமையை வெளிப்படுத்திவிடுமோ என அஞ்சுகிறார்கள்.
பிரச்னைகளை எதிர் கொள்ளும்போது கேள்விகள் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக ஆகிவிடுகிறது.. ஏன், எதற்கு, எப்படி எப்போது, எவ்வளவு என சரியான நபரிடம் தொடுக்கும் கேள்விகள் இலக்கைக் சென்றடையும் தேவையான பல வழிகளை வெளிப்படுத்தும். "இந்த கேள்வியை மட்டும் கேட்டிருந்தால்" என்று பலர் அங்கலாய்ப்பு படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தேவையான கேள்விகளைக் கேட்பது நம் துணிவை வளர்க்கும் என்பது கண்கூடு.
அதிகாரத்தில் இருப்பவர்களை கண் கண்டு பயந்து கேள்வி கேட்காமல் இருப்பதும், நடப்பதெல்லாம் நன்மையே என்று கண்ணை மூடிக் கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதும், கேள்வி கேட்காமல் இருப்பதற்கான இரு காரணங்கள். நாம் பாதிப்பிற்குள்ளான தருணம் , கேள்வி கேட்பதற்கான முக்கிய தருணம் என்பதை மறந்து விடக் கூடாது.
பலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணி முக்கியக் கருத்துக்கள் பற்றிக் கேள்வி கேட்பதில்லை. எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, தேவை ஏற்படும் தருணங்களில் கடினமான கேள்விகள் கேட்க தயங்கக் கூடாது. சரியான கேள்விகள் நம்மை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்வதுடன், தவறான வழிகளில் இருந்து விடுபடவும் உதவும். இதனால் நம் துணிவும் அதிகமாகும்.
கேள்வி கேட்பது அறிவை வளர்க்கும். கேள்வி மற்றவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்பதல்ல. நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும். நம் நடவடிக்கைகளை, செயல்களை, பேச்சுக்களை நாம் கேள்வி கேட்கும்போது நம்மைப் பற்றியே நாம் தெளிவு கொள்கிறோம். ஒரு செயலை செய்து முடிக்க சொந்த அறிவும், திறனும், அனுபவமும் போதுமானதாக இல்லாதபோது தகுந்த கேள்விகள் பல்வேறு புது வியூகங்களை நமக்கு வெளிப்படுத்தும். தோல்விகள் தவிர்க்கப்படும். கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மனது கேள்விகள் கேட்கும். அத்தகைய மனம் துணிவை வெளிப்படுத்தும்.