
உங்களை மற்றவருடன் ஒப்பிட்டு, உங்களுக்குள் ஒரு உந்துதல் சக்தி ஏற்பட்டு நீங்கள் வளர்க்கப்பட்டால் அந்த பழக்கம் உங்களிடம் தொடர்ந்து வரும். மற்றவரை உயர்வாக நினைத்து அவரைவிட உயர்ந்த இடத்தை போராடி அடைவீர்கள். இங்கே வேறு ஒருத்தர் இன்னும் முன்னே சென்று அங்கிருந்து பழிப்பு காட்டுவார். இது எப்படி இருக்கிறது தெரியுமா. ஒரு எலாஸ்டிக் பட்டையை இழுத்துப் பிடித்தால் அந்த டென்ஷன் தாங்காமல் இரு முனைகளும் ஒன்றை ஒன்று எட்டி விடவேண்டும் என்று துடிக்கும். கையை எடுத்ததும் முனைகள் உந்தப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதும் மறுபடி இழுத்துப் பிடித்தால்தான் அதில் துடிப்பான இயக்கத்தைக் காணலாம்.
இப்படி வெளி சக்தியால் உந்தப்பட்டு இலக்கில் போய் விழுந்து விட்டால், உங்களை அடுத்த இலக்கைக் காட்டி உசுப்பினால்தான் மீண்டும் இயங்குவீர்கள். இழுக்கப்பட்ட எலாஸ்டிக் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும். அது தொய்ந்து இழுத்ததும் அறுந்தே போய்விடும். உறுதியில்லாத சிலர் தங்கள் இலக்கை எட்டுவதற்கு பதிலாக இதயத்தைப் பிடித்துக்கொண்டு மருத்துவமனையில் விழுகிறார்கள். வாழ்க்கை பூராவும் ஏன் உங்களை வேறு யாரோ செலுத்த வேண்டும்?.
அடுத்தவரிடம் நீங்கள் அதிகாரத்தை ஏன் ஒப்படைக்க வேண்டும். உங்களுக்கு மலை ஏற ஆசை என்றால் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து இன்னொருத்தரைக்காட்டி மனதை விரட்டிக் கொண்டிருந்தால் போதுமா. அது உங்களை மலை உச்சியில் கொண்டு விடுமா?.
உங்களால் எப்போது சிறப்பாக செயலாற்ற முடியும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஓடிக்கொண்டே இருக்கும் போதா அல்லது விழிப்புணர்வுடன் அமர்ந்து திட்டமிடும்போதா?. அமைதியாக விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பது உங்கள் ஆசைக்கும் குறுக்கே எழுப்பப்படும் வேகத்தடை அல்ல. அது உங்களை விரும்பிய திசையில் செயல்பட அனுமதிக்கும் சக்தி.
ஆனந்தமாக இருப்பதுதான் உங்கள் அடிப்படை இயல்பு என்பதை மறவாதிருங்கள். யாராலும் விரட்டப்படாமல், அமைதியாக இருங்கள். தேர்ந்தெடுத்த செயலில் விழிப்புணர்வுடன் தீவிரமாக இருங்கள். முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். அப்போதுதான் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் உள்சக்தியை உங்களுக்குள்ளேயே அடையாளம் காண்பீர்கள். அந்த உள்ள சக்தி மட்டுமே உங்களைச் செலுத்தும் சக்தியாக இருக்கட்டும்.
இன்னொருவர் சென்று சேர்ந்த உச்சியை நீங்கள் அடைய முடியாமல் போகலாம். ஆனால் உங்கள் உயரத்திற்கேற்ற திறமையை அடைந்திருப்பீர்கள். அது உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.