
ஒரு எழுத்தாளருக்கு, தான் எழுதும் கதைதான் ஒரு குழந்தை. அந்த குழந்தையை எப்படி வளர்க்கிறோம் என்பதை பொறுத்தே புத்தகத்தின் வெற்றியும் தோல்வியும் அடங்கும். அப்படித்தான் உலகளவில் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் புத்தகத்தை வளர்த்தெடுத்தார் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங். ஒரு குழந்தையை வளர்ப்பதுபோல் தனது புத்தகத்தை அவர் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் அனைவராலும் போற்றி புகழப்படும் ஒரு புத்தகமாக உருவெடுத்துள்ளது ஹாரி பாட்டர்.
ஹாரி பாட்டர் நாவலின் வெற்றி கதை:
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். சிறு வயதிலையே அவரது தாய் ஒரு வகையான மூளை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். அடுத்த சில நாட்களிலையே அப்பா அவர்களை பிரிந்து வேறொரு திருமணம் செய்துக்கொண்டார். இதனால் வீட்டிற்கு வரும் வருமானம் முற்றிலும் நின்றுபோனது.
ஆனால் அதிலும் எப்படியோ சிறு சிறு வேலைகள் செய்து ரௌலிங் கல்லூரி வரை படித்து தன் தங்கையையும் படிக்க வைத்தார். கல்லூரி முடிந்தவுடன் அம்மாவும் இறந்து விட்டார். தங்கையும் தனது காதலனை கரம்பிடித்து தனி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.
சிறுவயதில் இருந்தே கஷ்டத்தை மட்டும் அனுபவித்துவந்தtர் ஜே.கே. ரௌலிங். திருமணத்திற்கு பிறகாவது அவரின் வாழ்க்கை மாறியதா என்றால் அதுதான் பிரச்சனையின் தொடக்கமாக மாறியது. கருவூற்றிருந்த ஜே.கே. ரௌலிங்கை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கணவர்.
பிறகு தனியாகத்தான் அந்த குழந்தயையும் வளர்த்தார். ஒருமுறை வறுமையின் காரணமாக தற்கொலை வரை சென்ற அவரை அந்த குழந்தையின் சிரிப்பு தடுத்து நிறுத்தியது. இதுவரை சிறு நாவல்கள் மட்டுமே எழுதி வீட்டில் வைத்துக்கொண்ட அவர், கற்பனையால் ஒரு மேஜிக் உலகம் உருவாக்கி அதைவைத்து கதையை எழுத ஆரம்பித்தால் என்ன? என்று யோசித்தார். அதுதான் ஹாரி பாட்டர் கதைக்கு ஒரு விதைப்போட்டது.
கிடைத்த வேலையை செய்துக்கொண்டு சரியான சாப்பாடு கூட இல்லாமல் ஹாரி பாட்டர் முதல் பாகத்தை எழுதிக்கொண்டிருந்தார். வேலைக்கு செல்லும் நேரங்களைத் தவிர்த்து மீதம் இருந்த நேரங்களில் தூங்காமல் எழுதினார். ஒருவழியாக ரௌலிங் ஹாரி பாட்டர் முதல் பாகத்தை எழுதி முடித்தார். இங்கிலாந்தில் இருந்த முக்கால் வாசி புத்தகப் பதிப்பகத்திற்கு சென்று தனது கதையை கூறி வெளியிட முயற்சித்தார். ஆனால் 12 முறை அவருடைய ஹாரி பாட்டர் புத்தகம் நிராகரிக்கப்பட்டது.
ஒவ்வொருமுறையும் ஏன்? எதற்கு? நிராகரிக்கப்பட்டது என்ற பல கேள்விகள் தனக்குள் கேட்டுக்கொண்டார். அதற்கு அவருக்கு விடையே கிடைக்கவில்லை என்றாலும் தன் முயற்சியில் இருந்து அவர் பின்வாங்கவில்லை அப்போதுதான் ரௌலிங் ஹாரி பாட்டர் கதையை எடுத்துக்கொண்டு Bloomsbury Publishing புத்தக வெளியிட்டு நிறுவனத்திற்கு சென்றார்.
அந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனர் இந்த கதை குழந்தைகளுக்கானது என்று அந்த புத்தகத்தை தனது குழந்தையிடம் கொடுத்து படிக்க சொன்னார். ஹாரி பாட்டர் படித்து முடித்த அந்த நிறுவனரின் குழந்தை அடுத்த பாகம் எப்போது வரும் என அடம்பிடிக்கத்தொடங்கியது. அதுவே ஹாரி பாட்டர் கதை இந்த உலகம் முழுவதும் பிரபலாமாக முதல் காரணம் ஆகும். ஹாரி பாட்டர் முதல் பாகத்தை 1997ம் ஆண்டு Bloomsbury Publishing நிறுவனம் வெளியிட்டது.
ஓய்வுகொடுக்காத புகழ்!
ஹாரி பாட்டர் முதல் பாகம் மக்களிடையே குறிப்பாக குழந்தைகளிடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஜே.கே.ரௌலிங்கிற்கு மாபெரும் முயற்சியால் கிடைத்த மாபெரும் வெற்றி. ஆனால் இந்த புகழ் மற்றும் வெற்றி அவரை உட்கார அனுமதிக்கவில்லை. அதற்கு காரணம் அவரின் அடுத்த பாகங்களுக்கு கிடைத்த எதிர்ப்பார்ப்பு ஒன்றே. அதனை பூர்த்தி செய்வதற்கு மீண்டும் ஓட ஆரம்பித்தார் ஜே.கே.ரௌலிங் .
ஒரு எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிடுவது சுலபம், ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பை முழுமை செய்யும் வேலை மிக மிக கடினமானது. அதற்கான முழு உழைப்பையும் போட ஆரம்பித்தார் ஜே.கே.ரௌலிங். ஒரு நாளில் 24 மணி நேரமும் ஹாரி பாட்டர் கதையை எப்படி கொண்டு செல்வது என்பதை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார்.
ரயிலுக்கு காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில்கூட கையில் இருந்த பேப்ர்களில் ஹாரி பாட்டரின் காட்சி ஓவியத்தை வரைந்துக்கொண்டிருந்தார். வெளியில் எங்கேயாவது செல்லும் போது ஏதாவது யோசனை வந்தால் உடனே தனது கைபையில் எழுதி வைத்து வீட்டிற்கு வந்தவுடன் அதனை காபி செய்வார்.
இதைவிட ஒரு ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவென்றால். ஹாரிப்பாட்டர் முதல் பாகம் வெளிட்ட பின்னர் அவரது பிறந்த நாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது மிக களைப்புடன் இருந்த அவர் தனது பிறந்தநாள் ஆடை முழுவதும் அடுத்து என்ன எழுதுவது என்று அவருக்கு புரியும் படி சிறிது சிறிதாக எழுதினார். அந்த ஆடை இன்னும் அவரின் வீட்டில் நியாபக அர்த்தமாக வைத்திருப்பதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்படித்தான் அடுத்து இருந்த ஆறு பாகங்களையும் முடித்தார் ஜே.கே.ரௌலிங்.
ஹாரி பாட்டர் புத்தகம் முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்கு ஆகியவை 1998, 1999, 2000 என அடுத்த அடுத்த ஆண்டுகளில் வெளிவந்தது. 2003ம் ஆண்டு ஐந்தாவது பாகமும், 2005ம் ஆண்டு ஆறாவது பாகமும், 2007ம் ஆண்டு கடைசி பாகமும் வெளிவந்தது. ஒவ்வொரு புத்தக பாகமும் வெளிவர அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே ஹாரி பாட்டர் படமும் எடுத்து வெளியிடப்பட்டது உலகளவில் பெரிய ஹிட் கொடுத்தது.
ஜே.கே.ரௌலிங் வறுமையின் இருட்டு அறையிலிருந்து உலகின் மிக பெரிய பில்லியனர் ஆன முதல் எழுத்தாளர் என்ற பட்டத்தைப்பெற்றார். அதற்கு ஒரே காரணம் ஹாரி பாட்டர் என்று சொல்வதை விட அவரின் விடாமுயற்சி என்று சொல்வதே சரியானது.